நாடாளுமன்ற கூட்டம்.. பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. திருச்சி சிவா எம்பி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
டெல்லி: பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையுயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் குழுத்தலைவர் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான நோட்டிஸை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிரான ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை வழங்கி வருகின்றன.
கடந்த 18ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 34 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் கூட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. குறிப்பாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதத்தை கிளப்பியது.

இந்த கூட்டத்தொடரில் பதாகைகளை பயன்படுத்த கூடாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். அதேபோல காந்தி சிலை அருகில் போராட்டம் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை எதிர்த்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காந்தி சிலை அருகில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் கடந்த இரு நாட்களாக நாடாளுமன்றம் முற்றிலுமாக ஒத்திவைக்கப்பட்டு முடங்கியது.
இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று மாநிலங்களவை விதி 267-ன் கீழ் அனைத்து அலுவல் நடவடிக்கைகளையும் ஒத்திவைத்து பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையுயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் குழுத் தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதில், "பெட்ரோலிய பொருட்கள் மீதான விலையுயர்வு சாமானிய மக்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. அவர்களுடைய வாழ்வாதாரத்தில் ஒரு சுழலை ஏற்படுத்தியுள்ளது" என்றும் அவர் கூறினார். திமுகவை போலவே உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பியும், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக காங்கிரஸ் எம்.பி என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஒத்திவைப்பு நோட்டீஸ்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications