"ஹிந்தியில்தான் பேசுவேன்" தமிழக எம்பிக்களுக்கு ஆங்கிலத்தில் பதில் தர மறுத்த மத்திய அமைச்சர்.. மோதல்
டெல்லி: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தமிழ்நாடு எம்பிக்களின் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க மறுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப நாட்களாக மத்திய பாஜக அமைச்சர்கள் தென்னிந்திய எம்பிக்களின் கேள்விகளுக்கு ஹிந்தியில் பதில் அளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆங்கிலம் அல்லது மாநில மொழிகளில் எம்பிக்கள் கேள்வி எழுப்பும் போது அதற்கு ஆங்கிலத்தில் அமைச்சர்கள் பதில் அளிப்பதே வழக்கம்.
மரியாதை கருதி இப்படி ஆங்கிலத்தில் அமைச்சர்கள் பதில் வழங்குவார்கள். ஆனால் சமீப நாட்களாக மத்திய பாஜக அமைச்சர்கள் ஹிந்தியில் மட்டுமே பதில் வழங்கி வருகிறார்கள்.

ஹிந்தியில் பதில்
அந்த வகையில் லோக்சபாவில் நேற்று தமிழ்நாடு எம்பி ஏ கணேஷ மூர்த்தி தமிழ்நாட்டிற்கான அந்நிய முதலீடு குறித்து தமிழில் கேள்வி எழுப்பினார். துணை கேள்வி பிரிவில் தமிழ்நாட்டிற்கு வர கூடிய அந்நிய முதலீடு குறித்து விளங்கும்படி அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கேள்வி எழுப்பினார். இதையடுத்து பதில் அளித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், ஹிந்தியில் பேசினார். அதோடு எம்பி ஏ கணேஷ மூர்த்தி தமிழில் பேசிய விஷயங்களில் சில மொழிபெயர்ப்பு முறையாக செய்யப்படவில்லை.

மீண்டும் கேளுங்கள்
அதை மீண்டும் சொல்லும்படி அமைச்சர் பியூஸ் கோயல் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து எழுந்து நின்ற எம்பி ஏ கணேஷ மூர்த்தி, அவரிடம் நான் ஹிந்தியில் கேள்வி எழுப்பவில்லை. நான் தமிழில் கேள்வி எழுப்பி உள்ளேன். இப்போது அவரின் கோரிக்கையை ஏற்று நாங்கள் ஆங்கிலத்தில் கேள்வியை மீண்டும் சொல்கிறேன்.. இதற்கு அவர் ஆங்கிலத்தில்தான் பதில் அளிக்க வேண்டும், என்று குறிப்பிட்டார்.

மொழிபெயர்ப்பு
ஆனால் அமைச்சர் பியூஸ் கோயல், அவையில் மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறது. எனவே ஆங்கிலத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் நான் ஹிந்தியில்தான் பதில் அளிப்பேன் என்று குறிப்பிட்டார். பியூஸ் கோயலின் இந்த பதில் தென்னிந்திய எம்பிக்கள் இடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொதித்து போன தென்னிந்திய எம்பிக்கள், எம்பி ஒருவர் ஆங்கிலத்தில் அல்லது மாநில மொழியில் கேட்கிறார் என்றால் அமைச்சர் ஆங்கிலத்தில் பதில் அளிப்பதுதான் வழக்கம் என்று கூறி கோஷம் எழுப்பி வந்தனர்.

தமிழில் கேள்வி
இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழ்நாடு எம்பி கணேஷ் மூர்த்தியை மீண்டும் அதே கேள்வியை கேட்கும்படிகூறினார். இந்த முறையும் கணேஷ் மூர்த்தி தமிழில் கேள்வி எழுப்பினார். இதையடுத்து கேள்வி முடிந்ததும் எழுந்து நின்ற பியூஸ் கோஷல், அவையை நோக்கி ஒரு மொழியில் எழுப்பப்படும் கேள்விக்கு அதே மொழியில் பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? நீங்கள் தமிழில் கேட்டீர்கள் . நான் அதை மொழிபெயர்ப்பு வைத்து புரிந்து கொண்டேன்.

ஹிந்தியில் கேள்வி
அதனால் நானும் ஹிந்தியில்ஹான் பதில் அளிப்பேன். நீங்கள் மொழிபெயர்ப்பு வைத்து புரிந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார். மேலும் இந்தியிலேயே அவர் முழு பதிலையும் அளித்தார். இதனால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக லோக்சபாவில் தமிழ்நாடு எம்பிக்கள் கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஹிந்தியில் பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிந்தியா
கடந்த வாரம் தமிழ்நாடு எம்பிக்கள் சிலர் தமிழ்நாட்டில் கூடுதல் விமான நிலையங்களை அமைப்பது குறித்தும், சில விமான நிலையங்களுக்கு சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் தர வேண்டும் என்பது குறித்தும் கேள்வி எழுப்பி வந்தனர். அவையில் தமிழ்நாடு எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பிய நிலையில் சிந்தியா ஹிந்தியில் சரளமாக பதில் அளித்தார். அவர் ஹிந்தியில் பேசியது தமிழ்நாடு எம்பிக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சை
இந்த நிலையில் சிந்தியா பேச்சை கேட்டுக்கொண்டு இருந்த கேரளாவை சேர்ந்த திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர், தமிழ்நாடு எம்பிக்கள் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி உள்ளனர். அவர்களுக்கு ஹிந்தியில் பதில் அளிக்காதீர்கள். இது அவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு என்று கூறியது குறிப்பிடத்தக்கது. சமீப நாட்களாக மத்திய பாஜக அமைச்சர்கள் தென்னிந்திய எம்பிக்களின் கேள்விகளுக்கு ஹிந்தியில் பதில் அளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications