ஆப்கன் விவகாரம்:பிரதமர் மோடி தலைமையில்.. உயர்மட்ட குழு ஆலோசனை.. திடீர் மீட்டிங்கிற்கு என்ன காரணம்
டெல்லி: ஆப்கன் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெறுகிறது.
Recommended Video
ஆப்கனில் இருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேற்றப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் தாக்குதல்களைத் தொடங்கின.
அமெரிக்கப் படைகள் இல்லாததால் ஆப்கன் படைகள் பல பகுதிகளில் தாலிபான்களுக்கு எதிராகப் போராடவில்லை. இதனால், ஆப்கன் நாட்டின் பல்வேறு பகுதிகளை வேகமாகத் தாலிபான்கள் கைப்பற்றினர்.

தாலிபான்கள்
முதலில் எல்லைகளையும் கிராமப் புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் அடுத்து நகர்ப்புறங்களையும், மாகாண தலைநகர்களையும் கைப்பற்ற தொடங்கினர். அப்படி தான் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். காபூல் விமான நிலையத்தில் வெளிநாட்டினரைத் தாயகம் அனுப்பும் பணியில் இருந்த அமெரிக்கப் படையின் கடைசி வீரரும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியேறினார். இருப்பினும், கூட பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் இன்னும் ஆப்கனில் உள்ளனர். குறிப்பாக இந்தியர்களும் ஆப்கனை விட்டு வெளியேற விரும்பும் மத சிறுபான்மையினரும் அங்கு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமர் ஆலோசனை
இந்நிலையில் ஆப்கன் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியிலுள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள் துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். ஆப்கனில் தற்போது நிலவும் சூழல் குறித்தும், அங்குள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வருவது குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

என்ன காரணம்
பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் எதிர்ப்பு குழுவை வீழ்த்திவிட்டதாகத் தாலிபான்கள் கூறியுள்ள நிலையில், இந்த மீட்டிங் நடைபெறுகிறது. பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கு பகுதியில் ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே மற்றும் முன்னாள் ஆப்கானிஸ்தான் கெரில்லா கமாண்டர் அஹ்மத் ஷா மசூத்தின் மகன் அஹ்மத் மசூத் தலைமையிலான படைகள் தாலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியைக் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான்கள் அறிவித்திருந்தன. ஆனால், இதனை முற்றிலுமாக மறுத்துள்ள எதிர்ப்பு குழு, பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளன. இது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் உயர்மட்ட குழு
ஆப்கானிஸ்தானில் இருக்கும் சூழ்நிலை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கும் வகையில் பிரதமர் மோடி ஒரு உயர்மட்ட குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழுவில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட முக்கிய மூத்த அதிகாரிகள் உள்ளனர். இந்த குழு ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை குறித்தும் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு குறித்தும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

தாலிபான்கள் - இந்தியா உறவு
முன்பு ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி அரசுடன் இந்தியா நெருக்கமான உறவைக் கொண்டிருந்தது. இதனால் தாலிபான்கள் விஷயத்தில் இந்தியா இதுவரை அதிகாரப்பூர்வமாகத் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. முன்னதாக கடந்த வாரம் முதல் முறையாகத் தாலிபான்களுடன் இந்தியா தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டது. தாலிபான்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கத்தாருக்கான இந்தியத் தூதர் தூதர் தீபக் மிட்டல், தாலிபான்களின் அரசியல் அலுவலக பிரிவின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை சந்தித்தார். இந்த சந்திப்பில் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கானிஸ்தானைப் பயங்கரவாதிகள் பயன்படுத்துவது குறித்து இந்தியா தனது கவலையை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications