பிரதமர் மோடி அமெரிக்க பயணம்.. ஆப்கனுக்கு நோ, பாகிஸ்தானுக்கு யெஸ்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்??
டெல்லி: பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுள்ள நிலையில், பிரதமரின் விமானம் ஆப்கானைத் தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் ஏர் ஸ்பேஸில் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இன்று காலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
அதேபோல பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

அமெரிக்கா பயணம்
இதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை ஏர் இந்திய ஒன் சிறப்பு விமானம் மூலம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அவருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர். இந்த விமானம் டெல்லியில் இருந்து நேரடியாக அமெரிக்காவுக்குச் செல்கிறது. இந்த விமானம் ஆப்கன் ஏர்ஸ்பேஸை தவிர்த்துவிட்டு பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்திப் பறந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன்
அமெரிக்கா படைகள் வெளியேற பிறகு ஆப்கன் இப்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கன் புதிய பிரதமர் தொடங்கிய அனைத்து அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் கூட அங்கு இன்னும் முழுமையாகப் பதற்றம் குறையவில்லை. அங்குள்ள காபூல் விமான நிலையத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்தும் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்தச் சூழலில் பிரதமர் மோடியின் விமானம் ஆப்கன் ஏர் ஸ்பேஸை பயன்படுத்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வழியே
ஆப்கனுக்கு பதிலாகப் பாகிஸ்தான் ஏர் ஸ்பேஸை பயன்படுத்த அந்நாட்டு அரசிடம் இந்தியா அனுமதி கோரியிருந்தது. இதற்குப் பாகிஸ்தான் அரசும் அனுமதி அளித்த நிலையில், பாகிஸ்தான் ஏர் ஸ்பேஸை பயன்படுத்தி பிரதமர் மோடியின் விமானம் அமெரிக்கா பயணித்தது. முன்னதாக சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் ஏர் ஸ்பேஸை பயன்படுத்த இந்தியாவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி அளிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019இல் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் போதும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து செல்லும் போது அவர்கள் விமானத்திற்குப் பாகிஸ்தான் அனுமதி மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா ஒன்
இன்று அதிகாலை டெல்லியிலுள்ள இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தளத்தில் இருந்து பிரதமர் மோடியின் விமானம் புறப்பட்டது. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அதிமுக்கிய பதவிகளில் உள்ளவர்கள் செல்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள ஏர் இந்தியா ஒன் சிறப்பு விமானத்தின் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ஆப்கன் வான்வழியைத் தவிர்த்துவிட்டு, செல்வதால், இந்த விமானம் கூடுதலாக சில மணி நேரம் பறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
