ரூ.462 கோடி செலவு செய்த மோடி.. 4 வருஷ வெளிநாட்டு பயண செலவு லிஸ்ட் வெளியானது
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணங்களுக்கு (PM Modi Foreign tour Cost)கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை மொத்தம் ரூ.462.58 கோடி செலவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை என்று மொத்தம் அவர் 43 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார். இருநாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய வெளிநாட்டு பயணங்கள் மிகவும் முக்கியமானதாக உள்ளன.

இதனால் தான் பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கிறார். சமீபத்தில் கூட பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மலேசியா சென்று நாடு திரும்பினார்.
43 முறை வெளிநாடு பயணம்
இந்நிலையில் தான் பிரதமர் மோடி கடந்த 2021 முதல் 2025ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்துக்கு ஆன செலவு விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி மொத்தம் 43 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதில் சில நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயணித்துள்ளனர்.
மொத்த செலவு எவ்வளவு?
அதிகபட்சமாக அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 4 முறையும், பிரான்சுக்கு 3 முறையும் பிரதமர் மோடி பயணம் செய்துள்ளார். பிரிட்டன் தென்னாப்பிரிக்கா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளுக்கும் தலா இரண்டு முறை சென்றுள்ளார்.
இந்த 4 ஆண்டு பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் ரூ.462.58 கோடி செலவாகியுள்ளது. மொத்த வெளிநாட்டு பயண செலவை எடுத்து கொண்டால் அமெரிக்கா சென்று திரும்பியதற்கு தான் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அதிக செலவு
இந்த காலக்கட்டத்தில் 4 முறை அமெரிக்கா பயணித்த பிரதமர் மோடியின் மொத்த செலவு ரூ.74.4 கோடியாக நிற்கிறது. இது 4 ஆண்டு மொத்த வெளிநாட்டு பயணச் செலவில் 16 சதவீதமாகும்.
இதற்கு அடுத்தப்படியாக மொத்த செலவில் ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணித்த செலவு உள்ளது. இந்த இருநாடுகளுக்கான மோடியின் பயண செலவு மொத்த செலவில் தலா 9 சதவீதமாக உள்ளது.
பிரான்ஸ் செலவு
இதில் கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்சுக்கு சென்றார். இந்த பயணத்துக்கு தான் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு டிரிப்பிற்கு மட்டும் ரூ.25.5 கோடி செலவாகி உள்ளது. இதுதான், பயணத்தின்போது, பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டில் பங்கேற்றார்.
மேலும், பிரான்ஸ் அதிபரின் விருந்திலும், தலைமைச் செயல் அதிகாரிகள் (CEO) மாநாட்டிலும் கலந்துகொண்டதோடு, பிரான்ஸ் பயணத்தில், மார்சேல் நகரில் இந்தியத் தூதரகத்தைத் திறந்துவைத்தார். மேலும் ITER அணுக்கரு இணைவுத் திட்டத்தை பார்வையிட்டதுடன், ராணுவ அணிவகுப்பு மற்றும் மசார்கஸ் போர் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
2வது இடத்தில் அமெரிக்கா
இதற்கு அடுத்தப்படியாக ஒரு டிரிப்புக்கு அதிக செலவான இரண்டாவது பயணம் என்பது 2023 ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு சென்றதாகும். அப்போது ரூ.22.8 கோடி செலவானது. இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்றார்.
அதோடு அரசு விருந்தில் கலந்துகொண்டதுடன், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். மேலும், வணிகம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளிலும், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியிலும், ஐ.நா.வின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களிலும் கலந்துகொண்டார்.
3வது இடத்திலும் அமெரிக்கா
3வது அதிக செலவான பயணம் 2021 செப்டம்பரில் நிகழ்ந்தது. அதுவும் அமெரிக்கா பயணம் தான். அதற்கு ரூ.19.6 கோடி வரை செலவானது. இந்த பயணத்தின்போது, பிரதமர் ‛குவாட்' உச்சி மாநாட்டில் பங்கேற்றதுடன், ஐநா பொதுச் சபையில் உரையாற்றினார். மேலும், உலகத் தலைவர்கள் மற்றும் பிற நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications