பாதுகாப்பில் புதிய அத்தியாயம்: ஶ்ரீநகர்-லே இணைக்கும் சோனாமார்க் சுரங்கப் பாதையை திறந்த பிரதமர் மோடி!
டெல்லி: நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் புதிய அத்தியாயமாக ஜம்மு காஷ்மீரில் ஶ்ரீநகர் மற்றும் லே பகுதிகளை இணைக்கக் கூடிய சோனாமார்க் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 21-ம் நூற்றாண்டில் ஜம்மு காஷ்மீரில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் ஶ்ரீநகர்-லேவை இணைக்கும் சுமார் 12 கி.மீ நீளமுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதை திட்டம் ரூ.2,700 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த 6.4 கிமீ நீளமுள்ள சோனாமார்க் பிரதான சுரங்கப்பாதை, ஒரு வெளியேறும் சுரங்கப்பாதை, அணுகு சாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். கடல் மட்டத்திலிருந்து 8,650 அடி உயரத்தில் அமைந்துள்ள இது ஸ்ரீநகர், லே செல்லும் வழியில் உள்ள சோனாமார்க் இடையேயான அனைத்து பருவநிலைக்கும் பொருத்தமான வகையில் கட்டப்பட்டுள்ளது. நிலச்சரிவு, பனிச்சரிவு போன்ற காரணங்களால் போக்குவரத்தில் ஏற்படும் தடைகளைத் தவிர்க்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதிக்கு பாதுகாப்பான, தடையற்ற போக்குவரத்தை இந்த சுரங்கப்பாதை உறுதி செய்யும். இது சோனாமார்க் பகுதியில் தடையற்ற போக்குவரத்தை அனைத்து பருவநிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் குளிர்கால சுற்றுலா, சாகச விளையாட்டுகள், உள்ளூர் வாழ்வாதாரங்களை அதிகரிக்கவும் உதவிடும்.

2028-ம் ஆண்டில் நிறைவடையவுள்ள ஜோஜிலா சுரங்கப்பாதையுடன், இந்த சுரங்கப் பாதையை இணைப்பதன் மூலம் 49 கிமீ முதல் 43 கிமீ வரை பயண தூரத்தை குறைக்க முடியும் என்பதுடன் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 30 கிமீ முதல் 70 கிமீ வரை அதிகரிக்கவும் வழிவகுக்கும். ஸ்ரீநகர் பள்ளத்தாக்கு, லடாக் இடையே தடையற்ற தேசிய நெடுஞ்சாலை-1-ன் இணைப்பை இந்த சுரங்கப்பாதை உறுதி செய்யும். இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதி முழுவதும் பாதுகாப்பு தளவாடங்களை கொண்டு செல்வதற்கும், பொருளாதார வளர்ச்சி, சமூக-கலாச்சார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கும் உதவிடும்.
ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி. சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகளால் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம் என்றார். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உயிரிழந்த 7 தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
Inaugurated the Sonamarg Tunnel, which will be a game changer as far as infrastructure for Jammu and Kashmir is concerned. It will boost tourism and commercial activities, which is great for J&K. pic.twitter.com/B4fTTnIlNn
— Narendra Modi (@narendramodi) January 13, 2025
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணையமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், அஜய் தம்தா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications