மோடி கையை பார்த்தீங்களா? “வாட்ச் எப்படி இருக்கு” 1947ல் வந்த 1 ரூபாய் நாணயத்தில் தயாரிப்பு! சுவாரசியம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது கையில் அணிந்திருக்கும் வாட்ச் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வாட்ச்சில் நம் நாடு சுதந்திரம் அடைந்த 1947 ம் ஆண்டை குறிப்பிடும் வகையில் நாணயம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் அதன் விலை, பின்னணி குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி எப்போதுமே தான் அணியும் ஆடையின் மூலமாக டிரெண்ட்டிங் ஆவார். குறிப்பாக சுதந்திர தினம், குடியரசு தினம் உள்பட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளின்போது அவர் அணியும் ஆடை அனைவரையும் கவரும். மேலும் அதன் பின்னணி குறித்த சுவாரசிய தகவல் வெளியாகும்.

அந்த வகையில் தான் பிரதமர் மோடி தற்போது அணிந்துள்ள கைக்கடிகாரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. நம் நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுக்கூறும் வகையில் அவரது வாட்ச் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது நம் நாடு 1947 ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்தது. அதனை போற்றும் வகையில் 1947 ல் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு அவரது கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நாணயம் தான் கடிகாரத்தின் டயலாக உள்ளது. அந்த டயலின் உள்ளே புலி நடந்து செல்வது போல் உள்ளது.. இந்த கடிகாரத்தின் மொத்த டயலும் 43 மில்லிமீட்டரில் சில்வர் ஸ்டெயின்லெஸ்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்பது 316எல் வகையை சேர்ந்தது. இது நீடித்து உழைக்கும். அதேபோல் வாட்ச் என்பது ஜப்பானின் மியோட்டா ஆட்டோமெட்டிக் மூவென்ட் நுட்பத்தில் இயங்கும். இது சிறப்பான மற்றும் துல்லியமான நேரத்தை காட்டுவதற்கு பெயர் பெற்றது.இதில் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ட் உள்ளது. அதுமட்டுமின்றி எந்த வகையான உடைகள் அணிந்தாலும் கையில் அணிய இந்த வாட்ச் சிறப்பானதாக இருக்கும்.
இந்த கடிகாரத்தை ஜெய்ப்பூரை சேர்ந்த ரோமன் பாக் (Roman Baagh) நிறுவனம் தயாரித்து வழங்கி உள்ளது. இந்த நிறுவனத்தை உருவாக்கியவரின் பெயர் கவுரம் மேக்தா. இந்த நிறுவனம் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்த பொருட்களை பயன்படுத்தி கைக்கடிகாரங்கள் தயாரித்து வழங்குவதில் புகழ்பெற்ற நிறுவனமாகும். நம் நாட்டில் வெளிநாடு வாட்ச் பிராண்டுகளில் கொடிகட்டி பறக்கும் நிலையில் தனது வித்தியாசமான தயாரிப்புகள் மூலம் இந்த நிறுவனமும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.
தற்போது பிரதமர் மோடி பயன்படுத்தி வரும் இந்த வாட்ச்சின் மொத்த மதிப்பு ரூ.55 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி இந்த வாட்ச்சை அணிந்திருக்கும் போட்டோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிக கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உள்நாட்டு பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். அதற்கு உதாரணமாக அவர் வெளிநாட்டு நிறுவனங்களின் வாட்ச்சை அணியாமல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தின் வாட்ச்சை அணிந்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு வகையான வாட்ச்களை வைத்திருக்கிறார். இருப்பினும் இந்த வாட்ச்சை அவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை அடிக்கடி அணிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications