ராமர் கோவில் திறப்பு விழா.. பிரதமர் மோடிக்கு குடியரசுத்தலைவர் கடிதம்.. சொன்னது இதுதான்
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு தனது வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது.

உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்டமாக உள்ளது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களை கொண்டுள்ளது.
கலையும், பாரம்பரியமும் கொண்ட இந்த பிரமாண்ட கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை உள்ளிட்டவை 22 ஆம் தேதி திங்கட்கிழமை பகல் 12.20 மணிக்கு நடக்கிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட யாகசாலையில் அந்த கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. 121 ஆச்சாரியார்கள் இந்த பூஜைகள் மற்றும் யாகங்களை நடத்தி வருகிறார்கள்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி இதற்காக 11 நாட்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு வருகிறார். சொகுசு படுக்கையில் உறங்காமல் வெறும் தரையில் போர்வை விரிப்புகளை பயன்படுத்தியே துங்கி வருகிறார். அதோடு இளநீர் மற்றும் பழங்கள் மட்டுமே உணவாக மோடி உட்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இருக்கும் பிரதமர் மோடிக்கு, குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், பிரதமர் மேற்கொண்ட 11 நாள் விரதம் பற்றியும் குடியரசுத்தலைவர் குறிப்பிட்டுள்ளார். குடியரசுத்தலைவர் கூறுகையில், " நீங்கள் (மோடி) 11 நாட்கள் மேற்கொண்ட கடுமையான விரதம் புனிதமான சடங்கு மட்டுமல்ல.
ராமபிரானுக்கான அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆகியவை அடங்கிய உயரிய ஆன்மீக பணியாகும்" என்று கூறியுள்ளார். மேலும் அயோத்தி செல்லும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குடியரசுத்தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடவுள் ராமரின் சிறப்புகள் குறித்தும் குடியரசுத்தலைவர் இந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications