நாளை டெல்லி வாங்க.. தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவருக்கு பிரதமர் மோடி அளித்த இன்ப அதிர்ச்சி
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக உள்பட எந்த கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க தேவையான 272 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை. எனினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.. இதையடுத்து கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்தது.

கடந்த ஜூன் 5ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடந்தது. அதில், பிரதமர் மோடி 3-வது தடவையாக பிரதமர் ஆவதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன. அப்போது பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமைக்கப்படும்வரை காபந்து பிரதமராக செயல்படும்படி அவரை குடியரசுத் தலைவர் அவரை கேட்டுக்கொண்டார். அப்போது 17-வது லோக்சபாவை கலைப்பதற்கான பரிந்துரையையும் பிரதமர் நரேந்திரமோடி அளித்தார். அதை ஏற்று லோக்சபாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலைத்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நாடாளு மன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. அதில், பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவார். ஜனசேனா தலைவர் நடிகர் பவன் கல்யாண், ராஷ்டிரீய லோக்தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக (பிரதமர்) தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத்சிங் முன்மொழிந்தார். இதனை அமித்ஷா, நிதின் கட்கரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வழிமொழிந்தனர். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்ட புத்தகம் மீது தலைவைத்து மோடி வணங்கி மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஜே.பி.நட்டா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதிநிதிகள் குழு, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தது. நரேந்திர மோடியை நாடாளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை வழங்கியது. கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் ஒப்படைத்தது. இந்த ஆதரவு கடிதங்களின் அடிப்படையில், 18-வது லோக்சபாவில் பெரும்பான்மை ஆதரவு நரேந்திர மோடிக்கு இருப்பதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திருப்தி அடைந்தார். தொடர்ந்து'
அரசியல் சட்டத்தின் 75(1)-வது பிரிவின்கீழ், தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நரேந்திர மோடியை பிரதமராக நியமித்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு கடிதத்தை பிரதமரிடம் குடியரசுத் தலைவர் வழங்கினார். இதற்கிடையே, பிரதமர் மோடி பதவியேற்பு விழா, டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 7.15 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
எனவே, நாளை மாலை 7.15 மணிக்கு பிரதமர் மோடி, தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். மத்திய அமைச்சர்களும் அன்று பதவியேற்கிறார்கள்.
இதன் மூலம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, தொடர்ந்து 3-வது தடவையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்ற பெருமையை மோடி பெறுகிறார். இதனிடையே குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் சென்னை கோட்டத்தை சேர்ந்த பெண் ரெயில் என்ஜின் டிரைவர் ஐஸ்வர்யா மேனனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரெயில்களில் இவர் பணியாற்றி வருகிறார். இதேபோல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நாட்டின் முதல் பெண் ரயில் என்ஜின் டிரைவரான சுரேகா யாதவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications