டெல்லி எல்லையில் நீடிக்கும் பதற்றம்.. 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. ஹரியானாவில் டிராக்டர் பேரணி
டெல்லி: வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக விவசாய அமைப்புகள் அறிவித்தன.

டெல்லி சலோ என்ற பெயரில் விவசாயிகள் தொடங்கிய இந்த போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 13-ந் தேதி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை தொடங்கினர். பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகளை பஞ்சாப்-ஹரியானா இடையே ஷம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் போலீசார் தடுத்தி நிறுத்தியுள்ளனர்.
5வது நாளாக போராட்டம்: இதனால் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இதற்கிடையே, விவசாய சங்க தலைவர்களுடன் கடந்த 8 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து நேற்று முன் தினம் இரவு 3- ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எடப்படவில்லை.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மீண்டும் பேசுவோம். ஒன்றாக அமர்ந்து பேசி தீர்வு காணப்படும் எனவும் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் 5-வது நாளாக நீடிக்கிறது.
டிராக்டர் பேரணி: ஹரியானா எல்லையில் டிராக்டர்களுடன் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். போலீசாரும் டெல்லி எல்லையில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழலே உள்ளது. ஹரியானாவில் உள்ள அம்பாலா, குருக்ஷேத்ரா, ஜிந்த், ஹிசார், பேட் ஹதாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களில் மொபைல் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் காலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று ஹரியானாவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் சுங்கசாவடிகளை முற்றுகையிடுவோம் என்று பாரதிய கிஷான் யூனியன் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications