லோக்சபா சபாநாயகர் தேர்தல்: கோபப்பட்ட மமதா.. போன் போட்டு பேசிய 'எதிர்க்கட்சி' தலைவர் ராகுல்!
டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் "இந்தியா" கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 29 எம்பிக்களும் ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவது மற்றும் கொடிக்குன்னில் சுரேஷை வேட்பாளராக அறிவிப்பது குறித்து தங்களிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாலர் அபிஷேக் பானர்ஜி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
லோக்சபா சபாநாயகர் பதவியை ஒருமனதாக தேர்ந்தெடுக்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு கடைசிநேரத்தில் முயற்சிகளை மேற்கொண்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கொண்ட இந்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்தியா கூட்டணி சார்பில் துணை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பாஜக கூட்டணி இதனை நிராகரித்தது.

இதனையடுத்தே லோக்சபா சபாநாயகர் தேர்தலில் இந்தியா கூட்டணி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் 8 முறை எம்பியான கேரளாவை சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார்.
அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒன்றான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, லோக்சபா சபாநாயகர் தேர்தல் குறித்து தங்களிடம் ஆலோசிக்கவும் இல்லை; வேட்பாளர் யார் என்று கூட தெரிவிக்கவில்லை என அதிருப்தியை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்தது.
இதனையடுத்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உடனடியாக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியுடன் போனில் பேசியிருக்கிறார். அப்போது டெல்லியில் நேற்று முன்தினம் முதல் நடைபெற்ற பரபரப்பான ஆலோசனைகள், பாஜகவின் பிடிவாதம் உள்ளிட்டவற்றை மமதாவிடம் ராகுல் காந்தி விரிவாக விவரித்தாராம்.
ராகுல் காந்தியின் இந்த சமாதான முயற்சிகளை ஏற்றுக் கொண்ட மமதா பானர்ஜி தற்போது "இந்தியா" கூட்டணி வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேஷை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 29 எம்பிக்களும் ஆதரித்து வாக்களிப்பர் என அறிவித்துள்ளார் என்கின்றன டெல்லி தகவல்கள்.












Click it and Unblock the Notifications