2 சிக்கல்கள்.. அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு நெருக்கடி.. இனி என்ன நடக்கும்?
டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டிருப்பதால் டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் அவர் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தீர்ப்புக்கு தடை உத்தரவு பெறாவிட்டால், ராகுல் காந்தி பங்களாவை காலி செய்ய வேண்டியது வரும் என்கிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் எண்.12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வருகிறார். கடந்த 2004-ம் ஆண்டு அவர் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து அந்த பங்களாவில் தான் குடியிருந்து வருகிறார்.
தற்போது அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால் அவர் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க முடியாத நெருக்கடி உருவாகி உள்ளது.

ஒரு மாதம் டைம்
இதுபற்றி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கூறுகையில், "அவர் (ராகுல் காந்தி) லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அவர் அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. பதவி பறிப்பு உத்தரவு வெளியான ஒரு மாத காலத்தில் அவர் பங்களாவை காலி செய்து விட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

தடை உத்தரவு
இதனிடையே மேல் நீதிமன்றத்தில் தன் மீதான தீர்ப்புக்கு தடை உத்தரவு பெறாவிட்டால், ராகுல் காந்தி பங்களாவை காலி செய்ய வேண்டியது வரும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில். இந்த சூழலில் ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா? என்பதையும் இப்போது பார்ப்போம்.

இந்த நடவடிக்கை
அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள்
இதில் ராகுல் காந்திக்கு சட்ட நிவாரணம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தால், ராகுல் காந்திக்கு தண்டனை காலமான 2 ஆண்டுகள் மட்டுமல்ல, தண்டனைக் காலம் முடிந்து 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் தகுதி நீக்க காலம் ஆகும். இந்த 8 ஆண்டு காலத்தில் அவர் தேர்தலில் நிற்க முடியாது என்று அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

சட்ட நிபுணர்கள்
அதேநேரம் சூரத் நீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அங்கும் சட்ட நிவாரணம் கிடைக்காவிட்டால் ராகுல் காந்தி தனது தண்டனை தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யலாம். குஜராத் உயர்நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ, ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைப்பதுடன், தீர்ப்புக்கும் தடை விதிக்க வேண்டும். இது நேர்ந்தால் பதவி பறிப்பும் நிறுத்தி வைக்கப்படும் என அரசியல் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

கைவிட வேண்டும்
ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். என்ன சிக்கல் என்தை பாருங்கள்.. நீதிமன்றம் உத்தரவிட்டாலும், தகுதி நீக்கம் செய்ததை நாடாளுமன்ற செயலகம் நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும் அப்போது தான் வயநாடு எம்பியாக ராகுல் காந்தியால் தொடர முடியும்.

ராகுலுக்கு நிவாரணம்
ஏற்கனவே லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. பி.பி. முகமது பைசலுக்கு கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கவரட்டி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்தத் தீர்ப்பை அடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ஆனால் முகமது பைசல் கேரள உயர்நீதிமன்றம் மேல்முறையீடு செய்துள்ளார். கேரள ஐகோர்ட்டு அவர் மீதான தண்டனையை நிறுத்தி வைத்ததுடன், செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்புக்கும் தடை விதித்துள்ளது. ஆனால், தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ராகுலுக்கு நீதிமன்றம் நிவாரணம் தந்தாலும், நாடாளுமன்ற மக்களவை செயலகத்தின் கையில் தான் இறுதி முடிவு இருக்கிறது.












Click it and Unblock the Notifications