மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை! தனது உரையை நீக்கியதற்கு ராகுல் எதிர்ப்பு! சபாநாயகருக்கு கடிதம்
டெல்லி: ராகுல் காந்தி உரையின் சில பகுதிகள் லோக்சபா அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உரையை நீக்க கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
18வது லோக்சபா தேர்தல் நிறைவடைந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக்கொண்டார். தேர்தல் முடிந்து முதல் முறையாக ஜூன் 27ம் தேதி நாடாளுமன்றம் கூடியது. எம்பிக்கள் பதவியேற்ற நிலையில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். தற்போது அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று இந்த விவாதத்தில் அக்னிபாத் திட்டம் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி அடுக்கினார். ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக முதல் முறையாக சமீபத்தில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே அவரது முதல் உரை குறித்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கேற்றவாறு பல பல்வேறு விஷயங்களில் மத்திய அரசை கடுமையாக ராகுல் விமர்சித்திருந்தார். குறிப்பாக அக்னிபாத் திட்டத்தில் மத்திய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கினார்.
"சமீபத்தில் ஒரு அக்னிவீரர் கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்தார். ஆனால், அவரது மரணத்தை அரசு வீர மரணமாக ஏற்கவில்லை. அந்த வீரரை தியாகி என அரசு கூறவில்லை. 'USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் அக்னிபாத் திட்டம். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியினுடையதுதான்" என்று விமர்சித்துள்ளார்.
இது தவிர நீட், மணிப்பூர் என மத்திய அரசு தொடர் விமர்சனங்களை அவர் அடுக்கியிருந்தார். சுமார் 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விவாதத்தில் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி எழுந்து நின்று ராகுலின் பேச்சை குறுக்கிட்டார். அமித்ஷா உள்ளிட்ட 9 மூத்த அமைச்சர்கள் ஏறத்தாழ 50 முறை பதற்றத்துடன் குறுக்கிட்டனர். ஆனால், ராகுல் காந்தி தனது உரையை நிறுத்தவில்லை.
இந்நிலையில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பற்றிய விமர்சனம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மொத்தமாக ராகுல் உரையில் 11 பகுதிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே பேசிய பேச்சுகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மோடியின் உலகில் உண்மைக்கு இடமில்லை என்று விமர்சித்துள்ளார். மேலும், தனது உரையில் எந்த பகுதியும் நீக்கக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "சபை நடவடிக்கைகளில் சிலவற்றை நீக்குவதற்கு சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. எவற்றை நீக்க வேண்டும் என்பது குறித்து விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எனது உரையின் பெரும்பாலான பகுதிகள் நீக்கப்பட்டது குறித்து நான் அதிர்ச்சியடைந்துள்ளேன். நீக்கப்பட்ட பகுதிகள் விதி 380ன் வரம்பிற்குள் வராது என்பதை நான் தெளிவுப்படுத்தப்பட விரும்புகிறேன்.
நாடாளுமன்றத்தில் நான் எழுப்பியது மக்களின் குரலைத்தான். இந்திய அரசியலமைப்பின் 105 (1) வது பிரிவில் பேச்சு சுதந்திரம் உள்ளது. மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்ப உரிமை இருக்கிறது. இந்த கடமையை நிறைவேற்றும் வகையில்தான் நான் பேசினேன். என்னுடைய கருத்துக்களை லோக்சபா பதிவுகளில் இருந்து நீக்குவது பாராளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.
இந்த நேரத்தில் அனுராக் தாக்கூரின் பேச்சை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவருடைய பேச்சில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்தன. ஆனால்,
ஆச்சரியப்படும் விதமாக ஒரே ஒரு வார்த்தை மட்டும் அவரது உரையிலிருந்து நீக்கப்பட்டது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications