ஊழல் பழியை மணீஷ் சிசோடியா மீது போட்டாரா கெஜ்ரிவால்? சிபிஐ வாதங்களை நிராகரித்தது நீதிமன்றம்!
டெல்லி: மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், சிபிஐ-ன் குற்றச்சாட்டுகளை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மறுத்திருக்கிறது.
2021-2022ம் ஆண்டு டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்று டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா சிபிஐக்கு பரிந்துரைத்திருந்தார். இதனையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.

இந்த முறைகேடு மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறையும் தனது பங்குக்கு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்ற காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டது.
இடையில் லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. கடந்த மே மாதம் 10ம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் 2ம் தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நியாய் பிந்து அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். எனவே கடந்த 21ம் தேதி கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வர இருந்தார்.
ஆனால், ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. அதேபோல சிபிஐ-யும் கெஜ்ரிவாலை சிறையில் இருந்த நிலையில் கைது செய்தது. இதனால் கெஜ்ரிவால் வெளியே வருவதில் தொடர் சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜராகி சிபிஐ-ன் குற்றச்சாட்டுகளுக்கு கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
"ஊழல் குற்றச்சாட்டை மணீஷ் சிசோடியா மீது சுமத்தியுள்ளேன் என்று சிபிஐ வட்டாரங்கள் மூலம் தவறான செய்தி ஊடகங்களில் பரப்பப்படுகிறது . மனிஷ் சிசோடியாவையோ அல்லது வேறு யாரையோ குற்றம் சாட்டி நான் அப்படி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மணீஷ் சிசோடியா குற்றமற்றவர் என்று கூறியிருந்தேன். நான் குற்றமற்றவன்.
ஆனால், ஊடகங்களில் என்னையும், ஆம் ஆத்மி கட்சியையும் கேவலப்படுத்துவதே சிபிஐயின் திட்டம். ஊடகங்களில் சிபிஐ வட்டாரங்கள் பொய்யான செய்திகளை பரப்பியதாக நான் இங்கு பதிவு செய்கிறேன்" என்று நீதிமன்றத்தில் கூறினார்.
ஆனால் சிபிஐ, "ஊழல் குற்றச்சாட்டு மொத்தத்தையும் கெஜ்ரிவால், சிசோடியா மீது சுமத்தியுள்ளார்" என்று குற்றம்சாட்டியது. இதனை மறுத்த நீதிமன்றம், "நாங்கள் கெஜ்ரிவாலின் அறிக்கையை படித்தோம். அதில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை" என்று கூறியுள்ளனர். சிபிஐ-ன் வாதங்களை நீதிமன்றம் ஏற்க மறுத்திருப்பது கெஜ்ரிவாலுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications