அரசியல் சாசன படுகொலை நாள்: இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியது ஏன்? 1975-ல் என்னதான் நடந்தது?
டெல்லி: ஜூன் 25-ந் தேதியை அரசியல் சாசன படுகொலை நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1975-ம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் ஜூன் 25-ந் தேதிதான் அவசர நிலை எனும் எமர்ஜென்சியை (Emergency) பிரகடனம் செய்து ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டார். அவசர நிலை அமலில் இருந்த காலத்தில் நாட்டின் அரசியல் சாசனம் முடக்கப்பட்டு சர்வாதிகாரம் தலைவிரித்தாடியதால் மத்திய அரசு தற்போது ஜூன் 25-ந் தேதியை அரசியல் சாசன படுகொலை நாள் என அறிவித்துள்ளது.
இந்திரா காந்தி அவசர நிலையை அமல்படுத்த என்ன காரணம்? 1975-ல் நாட்டின் அரசியல் சூழ்நிலை என்னவாக இருந்தது? இதன் பின்னணியை பார்ப்போம்.

1971 லோக்சபா தேர்தலும் வழக்கும்: 1971-ம் ஆண்டு லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 352 இடங்களில் வெற்ற் பெற்றது. இடதுசாரிகள் 48, ஜனசங்கம் (இன்றைய பாஜகவின் முந்தைய அமைப்பு) 22, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களில் வென்றன. உ.பி. மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதியில் இந்திரா காந்தி அம்மையார் வெற்றி பெற்றார். இந்திராவின் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோசலிஸ்ட் கட்சித் தலைவர் ராஜ்நாராயணன் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மிசா சட்டம்: 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே பெரும் மோதல்கள் நீடித்தன. நாடாளுமன்ற பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி பல்வேறு சட்டங்களை இந்திரா காந்தி அமல்படுத்தி வந்தார். அதில் ஒன்றுதான் The Maintenance of Internal Security Act எனும் மிசா சட்டம்.
நாடு தழுவிய போராட்டங்கள்: இந்திரா காந்தி அம்மையாரின் இத்தகைய போக்குக்கு எதிராக பல மாநிலங்களில் மாணவர் இயக்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்தன. 1973-ல் குஜராத்தில் மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். 1974-ல் முதுபெரும் சோசலிஸ்ட் தலைவர் ஜேபி எனும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (இன்றைய லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்ட வட இந்திய அரசியல் கட்சி தலைவர்களின் பிதாமகன்) தலைமையில் பீகாரிலும் மிகப் பெரிய போராட்டம் நடந்தது. அதே கால கட்டத்தில் நாடறிந்த தொழிற்சங்க போராளியாக- தொழிற்சங்கங்களில் நம்பிக்கைக்குரிய பெருந்தலைவராக திகழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையில் இந்திய வரலாறு காணாத மிகப் பெரிய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இத்தகையப் போராட்டங்களை பிரதமர் இந்திராவின் மத்திய அரசு கடுமையாக ஒடுக்கிக் கொண்டே வந்தது.
இந்திராவுக்கு எதிரான தீர்ப்பு: இந்த பின்னணியில்தான் இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை 1975-ல் வழங்கியது. 1975-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி அம்மையார் வெற்றி பெற்றது செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது. அத்துடன் இந்திரா காந்தி அம்மையார் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதால் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக இந்திரா அம்மையார் உச்சநீதிமன்றம் சென்றார்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: இந்திரா காந்தி அம்மையாரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தவர் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர். (கேரளாவில் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர். பின்னாளில் நாடு போற்றிய மனித உரிமைப் போராளி. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 தமிழருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் உறுதுணையாக இருந்தவர் விஆர் கிருஷ்ணய்யர்). இந்திரா காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த விஆர் கிருஷ்ணய்யர் அளித்த தீர்ப்பு இந்திராவுக்கு மேலும் நெருக்கடியைத் தந்தது. அதாவது இந்திரா காந்தி அம்மையார் நாட்டின் பிரதமர்தான்; ஆனால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதா மீதும் வாக்களிக்க தகுதி இல்லாதவர் என அதிர்ச்சித் தீர்ப்பு கொடுத்தவர் விஆர் கிருஷ்ணய்யர். இதனால் இந்திரா காந்தி அம்மையார் 6 மாதத்தில் தேர்தலை எதிர்கொண்டு வெல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது.
அவசர நிலை பிரகடனம்: இதனை எதிர்கொள்ள முடியாமல்தான் இந்திரா காந்தி அம்மையார் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசர நிலை சட்டத்தை அமல்படுத்தினார். நாட்டின் அரசியல் சாசனம் முடக்கப்பட்டு சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டார் இந்திரா காந்தி அம்மையார். 1971-ல் கொண்டுவரப்பட்ட மிசா சட்டம் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டது. நாட்டின் அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிட்டது. மக்களின் நடமாட்ட சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் முடக்கப்பட்டது.
தமிழ்நாடும் திமுக ஆட்சியும்: அவசரநிலை கால ஒடுக்குமுறைகளுக்கு தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. தமிழ்நாட்டில் அப்போது முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்திராவின் அவசரநிலைக்கு எதிராக குரல் கொடுத்ததால் திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு திமுக தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான திமுக தலைவர்கள் சிறைக் கொட்டடிகளில் கொடூரமான தாக்குதல்களை அனுபவிக்க நேரிட்டது. இந்த அவசர நிலை பிரகடனமானது ஒவ்வொரு 6 மாதமும் நீட்டிக்கப்பட்டு 1977-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் வரை அமலில் இருந்தது. 1977 லோக்சபா தேர்தலில் இந்திரா காந்தி வீழ்த்தப்பட அவசர நிலை பிரகடனம் எனும் ஜனநாயகத்தின் கருப்பு அத்தியாயமும் முடிவுக்கு வந்தது.


Click it and Unblock the Notifications
