மாட்டிறைச்சிக்கு பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு.. மக்கள் நலன் மீது கவனம் செலுத்துங்கள்-உச்சநீதிமன்றம்
டெல்லி: மாட்டிறைச்சி கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுபோன்ற விவகாரங்களின் பின்னால் ஓடுவதை விட்டுவிட்டு மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று அசாம் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மாட்டிறைச்சி குறித்து தொடுக்கப்படும் வன்முறைகள் தீவிரமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் கவனம் பெற்றிருக்கிறது.

அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை சுற்றி 5 கி.மீ பரப்பளவில் மாட்டிறைச்சியை விற்கவோ, உண்ணவோ கூடாது என்று தடை அமலில் இருக்கிறது. மட்டுமல்லாது இந்த சட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு மற்றொரு திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, பொது இடங்களில் அதாவது கோயில்கள், மக்கள் கூடும் இடம், பள்ளி உள்ளிட்டவற்றில் மாட்டிறைச்சி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. மீறும் நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இப்படியாக இளைஞர் ஒருவர் மீது சமீபத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அவர், மாட்டிறைச்சியை பேக் செய்து கொண்டு சென்றார் என்பதுதான் குற்றச்சாட்டு.
ஆனால் போலீசாரின் குற்றச்சாட்டை எதிர்த்து நபர், உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இது தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அசாம் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "குற்றம்சாட்டப்பட்ட நபர் மாட்டை வெட்டி அதன் இறைச்சியை விற்பனை செய்து வருகிறார். போலீசார் வாகன சோதனையில் அவரை பிடித்தபோது, வாகனத்தில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
அது என்ன இறைச்சி என்பதை குற்றம்சாட்டப்பட்டவர் கூற மறுத்துள்ளார். எனவே அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இறைச்சி தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
இதனை மறுத்த குற்றம்சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர், "போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் எனது தரப்பு நபர், கிடங்கின் உரிமையாளர். இறைச்சியை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்ப்பதுதான் இவருடைய வேலை. அன்றும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இவருக்கு அது என்ன இறைச்சி என்று கூட தெரியாது" என்று கூறியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "அசாம் மாநில அரசு இதுபோன்று மாட்டிறைச்சி பிரச்சனைகளுக்கு பின்னால் ஓடுவதை தவிர்த்துவிட்டு, மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர், பேக் செய்யப்பட்ட இறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். இறைச்சியை பார்த்த மாத்திரத்தில் அது என்ன இறைச்சி என்று எப்படி அவரால் சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பி குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர். சமீப காலமாக அசாம் மாநிலத்தின் பெயர் பல்வேறு விஷயங்களில் அடிப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ் செய்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications