எது நடக்கக்கூடாதுன்னு பயந்தோமோ.. மூச்சுவிடவே திணறும் டெல்லி! காற்று மாசால் பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லி: தலைநகர் டெல்லியில் தீபாவளிக்கு முன்பாகவே காற்று மாசு அபாய கட்டத்தை எட்டிய காரணத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் பனி அதிகமாக இருக்கும் அக்டோபர் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு இயல்பை விட அதிகரிக்கும். அதேபோல இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளை எல்லாம் மிஞ்சும் வகையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. மாசு அளவு 201 - 300 வரை இருந்தால் அது மோசமான சுவாசிக்க கூடாத காற்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் டெல்லிக்கு இதெல்லாம் மிகவும் சாதாரண எண்கள். காரணம் அங்கு காற்று மாசு அளவு 400ஐ தாண்டி சென்றுகொண்டு இருக்கிறது.

தொழிற்சாலைகள், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, டெல்லியை சுற்றி அமைந்து உள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் மாசு பனிமூட்டத்தில் தங்கி கீழேயே தங்கிவிடுவதால் மாசின் அளவு இந்த காலக்கட்டத்தில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. மழை குறைந்ததாலும், காற்றின் வேகம் இல்லாததாலும் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்த உகந்த திட்டங்கள் கொண்டுவரப்படாத காரணத்தாலும், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் போதிய ஒத்துழைப்பு அளிக்காத காரணத்தால் சுவாசிக்க தகுதியற்ற காற்றாக டெல்லி மாறி இருக்கிறது.
இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. ஜஹாங்கிர்புரி, ஆர்கே புரம், விமான நிலையம், லோதி சாலை போன்ற இடங்களில் மாசு அளவு மிக மோசமாக உள்ளது. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளில் டெல்லி மாநகராட்சி இறங்கியுள்ளது. முதற்கட்டமாக மாசை கட்டுப்படுத்த தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. BS3 மற்றும் BS4 வாகனங்களை டெல்லிக்குள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது. கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. கட்டுமானப் பணிகளும் தடை செய்யப்பட்டு இருக்கின்றன.
காற்று மாசு அதிகரித்து இருப்பதால் பலருக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளன. குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள், ஆஸ்துமா, அலர்ஜி, சுவாசப் பிரச்சனை, நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த காற்று மாசுவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளை பாதுகாக்க 6 ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காற்று மாசு மேலும் அதிகரித்து வருவதால் விடுமுறை நவம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications