"ஐயோ.. பதறுதே.." தூங்கிய மாணவர் மார்பில் ஏறி நின்று.. கொடூரமாக தாக்கிய பள்ளி முதல்வர்! பகீர் சம்பவம்
டெல்லி: தூங்கிக் கொண்டிருந்த மாணவர் மீது திடீரென பள்ளி முதல்வர் ஏறி நின்று கொடூரமாக அடுத்து உதைத்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
நமது அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் ரொம்பவே முக்கியமானவர்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்குவதில் ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாமல் நிற்கும் மாணவர்களை வழிகாட்டி விடும் பல ஆசிரியர்கள் உள்ளனர்.
இப்படிப் பல ஆசிரியர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், துரிதிஷ்டவசமாக அனைத்து ஆசிரியர்களும் இப்படி இருப்பதில்லை. சிலர் மாணவர்களிடம் அத்துமீறி நடப்பதும், அவர்களை மோசமாகத் தாக்குவதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

மார்பில் ஏறி நின்று: அப்படியொரு ஷாக் சம்பவம் தான் பீகாரின் முங்கர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அங்கே தூங்கிக் கொண்டிருந்த மைனர் மாணவரை ஆசிரியர் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், அவரது மார்பிலும் ஏறி நின்றுள்ளார். இந்த கொடூரம் அத்தனையும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் ஜமால்பூரின் ஃபரியாத்பூர் பகுதியில் அமைந்துள்ள நிர்மலா இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் பப்ளிக் பள்ளியில் நடந்துள்ளது. கடந்த ஜூலை 16ஆம் தேதி இரவு 10 மணியளவில் இந்த கொடூரம் நடந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
என்ன நடந்தது: 12 வயதே ஆன மேத்யூ ராஜன் என்ற மாணவர் அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பள்ளி முதல்வர் ராம்நாத் மண்டல் அங்கு வந்துள்ளார். மாணவர் அருகில் வந்த அவர், திடீரென மாணவரைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். அத்துடன் விடாமல், மாணவரின் மார்பிலேயே ஏறி நின்றிருக்கிறார். அவர் செய்த செயலால் மேத்யூ கத்த ஆரம்பித்துவிட்டார். அருகில் இருந்த மாணவர்களும் இந்த கொடூரத்தைப் பார்த்து மிரண்டு போய் எழுந்து உட்கார்ந்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்திற்குப் பிறகு மேத்யூவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனக்கு நேர்ந்த இந்த மோசமான சம்பவத்தை அந்த மாணவர் அவரது பெற்றோரிடம் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
எதற்காக இந்த கொடூர தாக்குதல்: இதையடுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேத்யூவின் தந்தை ரமேஷ்குமார் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் ராம்நாத் மற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேத்யூவை அவரது பெற்றோர் சந்திக்க முயன்ற போது, முதலில் பள்ளி நிர்வாகம் அவரை சந்திக்கக் கூட அனுமதிக்கவில்லையாம். பெரும் போராட்டத்திற்குப் பின்னரே மேத்யூவை அவரது பெற்றோர் அங்கிருந்து கூட்டி வந்துள்ளனர். மேத்யூவின் கையிலிருந்து டெட்டால் பாட்டில் தவறுதலாக நழுவி மற்றொரு மாணவரின் முகத்தில் விழுந்துள்ளது இதன் காரணமாகவே முதலில் ராம்நாத்தின் மனைவி நிர்மலா தேவி அவரை அடித்து உதைத்துள்ளார்,
அதன் பிறகும் ஆத்திரம் தீராமல் மற்ற மாணவர்களுடன் மேத்யூ தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கே வந்த ராம்நாத் மண்டலும் அவரை இப்படி மோசமாக தாக்கியுள்ளார். நெஞ்சில் ஏறி நின்று கொடூரமாகத் தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications