இந்தியா தலைமையில் எஸ்சிஓ உச்சி மாநாடு.. ஜி ஜின்பிங், புதின், ஷெபாஸ் ஷெரீப் பங்கேற்பு.. ஏன் முக்கியம்
புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் இன்று நடைபெறுகிறது. மெய்நிகர் முறையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 2001-ம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் ஷாங்காய் நகரில் நடைபெற்ற மாநாட்டின்போது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் கடந்த 2017-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு என்பதுதான் உலகிலேயே மிகப்பெரிய கூட்டமைப்பு ஆகும்.

ஐரோப்பா - ஆசியாவை சேர்ந்த பல்வேறு நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பாக இது உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் இதுதான் உலகிலேயே பெரிய கூட்டமைப்பாக கருதப்படுகிறது. உலகின் 60 சதவிகித மக்கள் தொகை ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கீழ் வருகிறார்கள். அதேபோல் உலகின் 60 சதவிகித நிலப்பரப்பு இந்த கூட்டமைப்பின் கீழ் வருகிறது. உலகின் 30 சதவிகித ஜிடிபி இந்த கூட்டமைப்பின் கீழ்தான் வருகிறது.
கடந்த 2020 - 2021 காலகட்டத்தில் சீனா - இந்தியா இடையே கடும் எல்லை பிரச்சனை இருந்த சமயத்தில் எஸ்சிஓ மாநாடு பிரச்சனையின் பதற்றத்தை தணிக்க முக்கிய காரணமாக இருந்தது. கடந்த ஆண்டு இந்த எஸ்.சி.ஓ மாநாடு உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான எஸ்.சி.ஓ மாநாடு இந்தியா தலைமையில் இன்று(ஜூலை 04) நடைபெறுகிறது.
மெய்நிகர் முறையில் இந்தக் கூட்டமானது நடைபெறுகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள். ரஷ்யாவில் வாக்னர் குழுவின் கலகம் நடைபெற்ற பிறகு புதின் கலந்து கொள்ளும் முதல் மாநாடு இதுவாகும். இதனால், இந்தக் கூட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்த மாநட்டில் தீவிரவாத ஒழிப்பு, போதை பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த உச்சி மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி அதுபற்றி தலைவர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெறும் இந்தத் கூட்டத்தில் ஈரான் புதிய நிரந்தர உறுப்பு நாடாக இணைத்துக் கொள்ளப்பட உள்ளது.
ஆப்கானிஸ்தான் விவகாரம், உக்ரைன் மோதல் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், கனெக்டிவிட்டி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடைபெறலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முடிந்து இரண்டு வாரமே ஆகியுள்ள நிலையில், இன்று நடைபெற இருக்கும் இந்தக் கூட்டம் மிகவும் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications