தமிழ்நாட்டிற்கு கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலை வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு.. வாக்காளர் பட்டியல் வெளியீடு என தேர்தலுக்கான முன்னெற்பாடுகளை தேர்தல் ஆணையம் நிறைவு செய்து தயார் நிலையில் உள்ளது.

தற்போது மாநில வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நேற்று முன் தினம் சென்னை வந்தனர்.
பின்னர் தலைமை செயலக கட்டிடத்தில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் தேர்தல் துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு எந்திரங்களின் தயார் நிலை, தேர்தல் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அஜய் பாது ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பின்னர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் மற்றும் அரவிந்தன் ஆகிய இருவரும் இணை தலைமை தேர்தல் அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசில் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்தியபிரதா சாகு இருக்கும் நிலையில், கூடுதலாக ஒரு தலைமை தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுப்பது ஆகிய பணிகளை கண்காணிக்க கூடுதல் அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications