"டவுட் வருது.." வாக்குப்பதிவு விகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட மறுப்பது ஏன்! கபில் சிபல் கேள்வி
டெல்லி: வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட மறுப்பது அரசியல் கட்சிகளுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தரவுகளைப் பதிவேற்றுவதில் என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
நமது நாட்டில் இப்போது லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

வாக்குப்பதிவு நடந்து பல நாட்களுக்குப் பிறகே தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு விகிதத்தை வெளியிடுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், வாக்குப்பதிவு நாளில் வெளியிடப்பட்ட தரவுகளுக்கும் இறுதி வாக்குப்பதிவு தரவுகளுக்கும் இடையே 5 சதவீதத்திற்கும் மேல் வேறுபாடுகள் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு: இதனால் வாக்குப்பதிவு முடிந்து 48 மணி நேரத்திற்குள் இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தைத் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, வாக்குச் சாவடி வாரியாக பதிவான வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவது தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஒரு வாக்குச்சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதைக் காட்டும் 17சி விவரங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. இது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது ஏற்படுத்தும் என்பதே தேர்தல் ஆணையத்தின் கருத்தாக உள்ளது.
கபில் சிபல்: இதனிடையே ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். வாக்குப்பதிவின் முடிவில், 17சி படிவத்தில் இருக்கும் தரவுகள் அனைத்தும் வாக்குச்சாவடி முகவரிடம் வழங்கப்படுகிறது.. அப்படியிருக்கும் போது அதே வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரங்களை இணையத்தில் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார்,
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், "ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவானது என்பதை இந்த 17சி படிவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. இந்த தரவை கட்டாயம் பொதுவெளியில் வெளியிடத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கேள்வி: இந்த 17Cஇல் தான் தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டு.. அதை வாக்கெடுப்பின் முடிவில் வாக்குச் சாவடி முகவருக்கு வழங்குவார்கள்.. இதில் இருந்து எத்தனை வாக்குகள் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதே தகவல் தான் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படுகிறது. இப்போது அந்த தரவுகளை இணையத்தில் வெளியிட மறுப்பது ஏன்.. அதில் என்ன பிரச்சினை.. தேர்தலில் யார் வென்றார்கள் என்பதை இணையத்தில் பதிவிடுவதைப் போல இதையும் பதிவிடலாமே..
உத்தரவாதம் இல்லை: தேர்தலில் பதிவான வாக்குகளைக் காட்டிலும் கூடுதல் வாக்குகள் எண்ணப்படலாம். பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்படுகிறது என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை.. இந்த 17சி தரவுகளை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு ஏன் தயக்கம்? இதை இணையத்தில் வெளியிட்டால் வாக்குச் சாவடி முகவரின் தரவுகளுடன் ஒப்பிடப்பட்டுப் பார்க்கலாம். தேர்தல் ஆணையம் இதை வெளியிட மறுப்பதே பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications