பரபரப்பான சூழலில் இந்தியா வரும் ரணில்? மத்திய அமைச்சர்கள், செயலாளர்களுடன் இலங்கை தூதர் சந்திப்பு!
ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய வருகை தொடர்பாக டெல்லியில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
டெல்லி: இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு செயலாளர்களுடன் டெல்லியில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட ஆலோசனை நடத்தினார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நாடாளுமன்ற எம்.பிக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரணில் விக்கிரமசிங்கே. பொதுவாகவே இலங்கையில் பதவியேற்கும் ஜனாதிபதி அல்லது பிரதமர் இந்தியாவுக்கு முதலில் வருவது வழக்கம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு வருவதில் தாமதம் தொடர்கிறது.
அதேநேரத்தில் இலங்கை அரசாங்கமானது பல்வேறு வகையில் சீனாவுடன் மிக நெருக்கமாகிவிட்டது. சீனாவின் பிடியில் இலங்கை சிக்கிக் கொண்டது. இந்த உறவுகளை முறியடிக்கும் வகையில் மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், முரளிதரன், எல்.முருகன் ஆகியோரும் அடுத்தடுத்து இலங்கை சென்று திரும்பினர்.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்தார். பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பு இந்தியாவிலும் இலங்கையிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை முன்வைத்து பல்வேறு சாதக, பாதக கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன.
இதனிடையே டெல்லியில் கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரை சந்தித்தார் மிலிந்த மொரகொட. மேலும் மத்திய அரசின் நிதி செயலாளர் சோமநாதன், அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா, நிதி ஆயோக் தலைவர் பரமேஸ்வரன் ஐயர் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்தார்.

மேலும் டெல்லியில் பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோத்குமார் மிஸ்ராவையும் மிலிந்த மொரகொட சந்தித்து ஆலோசனை நடத்தினார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணத்துக்கான ஏற்பாடுகள், ஒப்பந்தங்கள் கையெழுத்திடுதல் தொடர்பாக இந்த சந்திப்புகளின் போது விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications