10 நாட்களுக்குள் ரஃபேல் விமான விலை விவரம் தேவை.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Recommended Video

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் சமூக செயல்பாட்டாளர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கும் இணைக்கப்பட்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா ஆகியோர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்தது. மத்திய அரசு இதுகுறித்து சீலிட்ட கவரில் தனது பதிலை வழங்க வேண்டும் என்று இம்மாதம் 10ஆம் தேதி உத்தரவை பிறப்பித்திருந்தது.
ரஃபேல் ஒப்பந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது, ரகசியமானது என்பதால் இது குறித்த வழக்கை எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் புறக்கணித்து, இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்த நிலையில், யஷ்வந்த் சின்கா உள்ளிட்டோர் தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
[மத்திய அரசுடன் மோதல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலக முடிவு?! அதிர்ச்சி]

உச்ச நீதிமன்றம் தலையீடு
இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், பிரசாந்த் பூஷன் தொடர்ந்து உள்ள இந்த வழக்கில், ஒப்பந்தம் தொடர்பாக புகாரை பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை நடத்த வேண்டும் என்று சிபிஐ அமைப்புக்கு உத்தரவிடுவதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் விசாரணை விவரங்களை உச்ச நீதிமன்றமே நேரடியாக கண்காணித்து பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழைய டெண்டர்
2007 ஆம் ஆண்டு ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் டெண்டர் கோரியது என்றும், டெண்டரில் மொத்தம் 126 போர்விமானங்கள் தேவைப்படுகிறது என்றும் அதில் 18 விமானங்கள் தயாரான நிலையிலும், எஞ்சிய 108 விமானங்கள் இந்தியாவில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் என்றும், நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

புதிய ஒப்பந்தம்
ஆனால் இப்போதைய பிரதமரும், பிரான்ஸ் நாட்டின் அதிபரும், பழைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 2015ல் புதிதாக ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி உள்ளனர். இதன்படி 126 ரஃபேல் போர் விமானங்களில் 36 விமானங்களை பறக்க தயாரான நிலையில் கொள்முதல் செய்வது என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஒப்பந்தத்தின்படி மொத்த ஒப்பந்தத்தில் 50 விழுக்காடு அளவுக்கு ஆப்செட் கான்ட்ராக்ட் என்ற வகையில், உதிரிபாகங்கள் தயாரிக்கும் பொறுப்பை இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அம்பானி குழுமம்
ஆனால் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள அனில் அம்பானி நிறுவனத்திடம்தான் இந்த பணியை ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், யு.யு.லலித், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்திற்கான நடைமுறை மற்றும் விலை விவரத்தை சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில், இன்னும் 10 நாட்களுக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கொள்முதல் நடைமுறையை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபால் கூறினார். இந்த பதிலை, பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கூடுதல் விலை
காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் 126 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது 79200 கோடி ரூபாய்க்கே ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையை கணக்கிட்டுப் பார்க்கும் போது 36 விமானங்களின் விலை என்னவோ 22600 கோடி ரூபாய் தான். ஆனால் 36 விமானங்களை ஏன் 58000 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்க இப்போதைய மத்திய அரசு முடிவெடுத்தது என்ற கேள்விக்கு, விடைதேடவே இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு அளிக்கப்போகும் பதிலை நாடே எதிர்பார்த்துள்ளது.












Click it and Unblock the Notifications