Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீதிமன்றங்கள் தலையிட முடியாது, ஆனால்.." வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கில் தலைமை நீதிபதி கருத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வக்பு சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு வக்பு சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனால் அந்த மசோதா சட்டமாக மாறியது. இருப்பினும், இந்த சட்டத்திற்குக் காங்கிரஸ், திமுக எனப் பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Supreme Court Hearing on Waqf Amendment Act Interim Order on Waqf by User

வக்பு வாரிய சட்டம்

இது தொடர்பாக பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதுபோல சுமார் 70க்கும் மேற்பட்ட மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கை அல்லது நியமனங்களையும் மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

கடந்த மே 5ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை என்பதைக் குறிப்பிட்ட அவர், தனக்கு ஓய்வு பெற நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் வழக்கை புதிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார்.

இன்று விசாரணை

இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு முதல்முறையாக இந்த வழக்கை விசாரிக்கிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, பலர் மனு தாக்கல் செய்திருந்தாலும் வக்பு சொத்து மீதான அரசு அதிகாரங்கள் குறித்துத் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து மனுக்கள் மட்டுமே விசாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்கள்

மேலும், முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா விசாரித்த போது, இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைக்க தலா இரண்டு மணிநேரம் வழங்கப்படும் என்று முடிவு செய்திருந்தது. வக்பு வாரியத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான், சல்மான் குர்ஷித் மற்றும் ஹுசைஃபா அஹ்மதி ஆகியோர் வாதங்களை முன்வைப்பார்கள். வக்பு சட்டத்தை எதிர்க்கும் மனுதாரர்களின் நோடல் வழக்கறிஞராக எஜாஸ் மக்பூல் இருப்பார்.

மறுபுறம் வக்பு சட்டத்தை ஆதரிக்கும் வழக்குகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, மனிந்தர் சிங், ரஞ்சித் குமார், ரவீந்திர ஸ்ரீவஸ்தவா மற்றும் கோபால் சங்கர் நாராயண் ஆகியோர் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல நோடல் வழக்கறிஞராக விஷ்ணு சங்கர் ஜெயின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கோரிக்கை

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த விவகாரத்தில் முன்பு மூன்று முக்கிய விஷயங்களை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. அந்த3 மூன்று விஷயங்களுக்கும் பிரமாண பத்திரம் மூலம் எழுத்துப்பூர்வ பதிலைத் தாக்கல் செய்துள்ளோம். ஆனால், இப்போது மேலும் பல்வேறு விவகாரங்கள் எழுப்புகிறார்கள். இதனால் ஏற்கனவே எழுப்பப்பட்ட மூன்று விஷயங்களில் மட்டும் சுப்ரீம் கோர்ட் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

கடும் எதிர்ப்பு

இருப்பினும், மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், "இந்த வழக்கை முன்பு விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். இப்போது மூன்று பிரச்சினைகளுக்கு மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று சொல்ல முடியாது" என மத்திய அரசு அரசு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்,

அப்போது கபில் சிபலும், "இந்த சட்டம் வக்பு நிலங்களைக் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டது.. எந்தவொரு செயல்முறையையும் பின்பற்றாமல் வக்பு சொத்துக்கள் பறிக்கப்படும் வகையில் சட்டம் இருக்கிறது. குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்புக்கு நிலத்தை வழங்க முடியும் என்ற நிபந்தனை இருக்கிறது. அதாவது நான் மரணப் படுக்கையில் இருக்கும்போது வக்புக்கு சொத்து வழங்க விரும்பினால், நான் ஒரு முஸ்லிம் என்பதை நிரூபிக்க வேண்டும். இது அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்றார்.

தலைமை நீதிபதி கருத்து

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி கவாய், "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் சட்டப்பூர்வமாகவே கருதப்படும். அவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கருதுவதற்கு வலுவான காரணம் இல்லாவிட்டால் அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது. இந்தச் சூழலில் வேறு எதுவும் எங்களால் சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

அப்போது தொடர்ந்து பேசிய கபில் சிபல், "புதிய வக்பு சட்டத்தின் கீழ், எந்தவொரு கிராம பஞ்சாயத்தும் அல்லது யாராக இருந்தாலும் வக்பு குறித்து குறைகளை எழுப்பலாம். இந்த விவகாரத்தில் அரசு அதிகாரி இறுதி முடிவை எடுப்பாராம். அதாவது அரசு அதிகாரி நீதிபதியாகச் செயல்படுவார். யாரும் எதுவும் கேட்க முடியாது" என்றார். வாதங்களைக் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையைப் பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+