Bihar SIR: "வாக்காளர் பட்டியலில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்.." உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பீகார் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.. அதாவது சார் நடவடிக்கையில் தவறாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட 11 ஆவணங்கள் இல்லாதவர்களிடம் ஆதாரை ஆவணமாகப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.
பீகாரில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக தேர்தல் ஆணையம் அங்குச் சார் எனப்படும் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தன.

இதற்கு முன்பு சார் நடவடிக்கை தொடர்பாக நடந்த விசாரணையில், நீக்கப்பட்டோரின் விவரங்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடும்படி உத்தரவிடப்பட்டது. இந்தச் சூழலில் தான் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆதாரை சமர்பிக்கலாம்
அப்போது, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், தங்கள் வசிப்பிடச் சான்றாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தேர்தல் ஆணையம் ஏற்கனவே உள்ள 11 ஆவணங்களுடன் ஆதார் அட்டையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்டோரையும் சேர்க்கத் தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மீது சாடல்
இறந்தவர்கள் மற்றும் போலியான பதிவுகளை நீக்கிய பிறகு, சுமார் 35 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வாக்காளர்கள் விரைந்து செயல்பட நீதிபதிகள் அறிவுறுத்தினர்.. செப்டம்பர் 1ம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி சூர்யா காந்த் உத்தரவிட்டார். விடுபட்டவர்களின் பெயர்களை ஆன்லைனிலும் சேர்க்கும் வகையில் வழி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் பீகார் அரசியல் கட்சிகள் மீது நீதிமன்றம் கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கடமைகளைச் செய்வதில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 65 லட்சத்துக்கும் அதிகமான நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு ஏன் எந்தவொரு அரசியல் கட்சியும் உதவவில்லை என்று கேள்வி எழுப்பியது.
நீதிபதிகள் அதிருப்தி
வரைவு வாக்காளர் பட்டியலில் தனிப்பட்ட முறையில் சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மட்டுமே ஆட்சேபணைகளைத் தெரிவித்துள்ளனர்.. அதேநேரம் கட்சியாக எந்தவொரு கட்சியும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், "உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்" என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
அப்போது அரசியல் கட்சிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், தங்கள் பூத் ஏஜெண்டுகள் சமர்பிக்கும் ஆட்சேபனைகளை தேர்தல் ஆணையம் அனுமதிப்பதில்லை என வாதிட்டனர். இதை குறித்துக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் 12 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளையும் சேர்க்க உத்தரவிட்டது.
மேலும் நீதிபதிகள், "தங்கள் பெயர்களை விடுபட்டதாக வாக்காளர்கள் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யலாம்.. அதேபோல பூத் ஏஜெண்டுகள் கூட ஆட்சேபனைகளை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . தேவையான ஆவணங்கள் சமர்பிக்கப்படுவதையும் பூத் ஏஜெண்டுகள் உறுதி செய்யலாம்" என்றனர்.












Click it and Unblock the Notifications