தெரு நாய்க்கு சாப்பாடு போடுவீங்களா? யாரையாவது கடித்தால் நீங்கதான் பொறுப்பு! சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகள் குறித்த தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து உள்ள நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் மகேஸ்வரி அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா, வாய்மொழியாக கூறிய சில கருத்துகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டார்.

வழக்கு
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சஞ்சீவ் கன்னா, தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்களே அதற்குப் பொறுப்பு என்றும் அந்த நாய்கள் யாரையாவது தாக்கினால் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், நீதிபதிகள் கூறுகையில், "எனக்கு நாய்கள் மிகவும் பிடிக்கும். நானே நாய் பிரியர் தான். என்னைப் போலவே இங்கு நாய்களை விரும்பும் பல லட்சம் பேர் உள்ளனர்.

பொறுப்பு
இவர்கள் தொடர்ச்சியாகத் தெருக்களில் வசிக்கும் நாய்களுக்கு உணவை வழங்குகிறார்கள். இவர்கள் எந்த நாய்க்கெல்லாம் சாப்பாடு போடுகிறார்கள் என்பதை கவுண்ட் செய்து வைத்துக் கொள்ளலாம். இவர்கள் தான் அந்த நாய்களுக்குப் பொறுப்பு. அந்த நாய்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும். அதேபோல அந்த நாய்கள் யாரையாவது தாக்கினால், அதற்கு இவர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

அவசியம்
தெருநாய்களின் அச்சுறுத்தலுக்குத் தீர்வு காண்பது அவசியம். தெருநாய்களுக்கு உணவளிப்பது தவறு ஒன்றும் இல்லை. அதேநேரம் தெருநாய்களால் அப்பாவி மக்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரு நாய்கள் விவகாரத்தில் இங்கு ஒரு பிரச்சனை இருப்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். உணவுப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் நாய்கள் மூர்க்கமாக மாறலாம் அல்லது அதற்குத் தொற்று ஏற்படலாம். ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்களை அதிகாரிகள் கண்டறிந்து, அதைப் பராமரிப்பு மையத்தில் வைத்துப் பராமரிக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

வாதம்
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு, "ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் 8 பேர் தெருநாய் கடிதத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பொது இடங்களில் கொடூரமான நாய்களால் தாக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் கூட கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான். எனவே இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று வாதாடினார்.

ஒத்திவைப்பு
கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உள்ளாட்சி சட்டங்களின்படி தெருநாய்களை விரட்ட 2015இல் கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் செப்.28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். கேரளாவில் நாய்கள் தாக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான புகார்களை விசாரிக்க 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ஜெகன் கமிஷனை அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.












Click it and Unblock the Notifications