ராகுல், கார்கே சொன்ன முக்கிய விஷயம்.. நாளைக்கே ஸ்டாலினிடம் சொல்வோம்.. கிரிஷ் சோடங்கர் பரபர பேச்சு
டெல்லி: திமுக கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்காததால் தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். ஆனால் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதேபோல் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஏதும் அமையாமல் தனித்து விடப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
மறுபுறம் ஆளும் கூட்டணியான திமுக இந்த முறையும் வலுவாக கூட்டணியை அமைத்து இருக்கிறது. காங்கிரசும் திமுகவுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையில், அதன் தலைவர்கள் அவ்வப்போது தவெகவுக்கு ஆதரவாக பேசி வந்தனர். இது திமுகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டு 70 நாட்களுக்கு மேல் ஆகியது.
ஆனால் திமுகவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, வேணுகோபால் தலைமையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
70 நாட்களாக காத்திருக்கிறோம்
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய கிரிஷ் சோடங்கர், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கடந்த 70 நாட்களாக காத்திருக்கிறோம். ஆனால் திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:- திமுக காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் எந்த குழப்பம் காங்கிரசிடம் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கோம். நிர்வாகிகள் யாரிடமும் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் பணிக்குழு மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பேச்சுவார்த்தை குழு இதுவரை நியமிக்கப்படவில்லை என்று சொல்லி தான் எல்லாரும் வருத்தப்படுகின்றார்கள்.
உடனடியாக பேச்சுவார்த்தை கமிட்டியை அமைக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. முதல்வர் ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையை வைக்க வேண்டும் என்பதே ராகுலின் கருத்து. அடுத்த கட்டமாக தேர்தல் களத்திற்கு போய் நிற்க வேண்டும். எனவே தான் சீக்கிரமாக பேச்சுவார்த்தையை தொடங்கி முன்பே முடிக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.
முதல்வர் ஸ்டாலினிடம் சொல்வோம்
எங்களது இந்த வருத்தமானது காங்கிரஸ் தலைமையிடம், ராகுல் காந்தியிடம் இருக்கா என சொல்ல முடியாது. எல்லாத்தையும் வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. தமிழகத்தில் தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையே இன்னமும் ஆரம்பிக்கவில்லையே? தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை நாளைக்கு முதல்வர் ஸ்டாலினிடம் சொல்வோம்.
தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி, கார்கே பயணத்திட்டம் மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பயணத்திட்டம் என எல்லாம் ரெடி.. நாங்க ரெடியாக இருக்கோம்.. பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு பின்னர்தானே பிரசாரத்திற்கு அழைத்துக் கொண்டு வரமுடியும்? இந்த விஷயத்தில் அதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாது. சீக்கிரம் முடிக்க வேண்டியது என்பது எல்லோருடைய எண்ணம். பேச்சுவார்த்தைக்காக குழு அமைத்து 70 நாட்களாக காத்திருக்கிறோம். ஆனால் இன்னமும் திமுகவில் குழு அமைக்கவில்லை என காங்கிரஸ் தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். என்று கூறினார்.












Click it and Unblock the Notifications