ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை.. தமிழகத்துக்கு ரூ.1,201 கோடி..சில பொருட்களுக்கு வரி குறைப்பு.. என்னென்ன?
டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இதில் ஜூன் மாதம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.16,982யை விடுவிக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.1,201 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் பென்சில் ஷார்ப்னர் உள்பட சில பொருட்களின் ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17ம் தேதி டெல்லியில் காணொலி மூலம் நடந்தது. அப்போது போதிய நேரம் இல்லை என பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங்கிற்கான ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் தான் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதுபற்றி விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டன.

பிடிஆர் பங்கேற்பு
இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஜிஎஸ்டி வரியை சில பொருட்களுக்கு குறைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு ரூ.1,201 கோடி
ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜூன் மாதம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை ரூ.16,982யை விடுவிக்க இந்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இந்த தொகையை வழங்க ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் தொகை இல்லை. இதனால் பொது நிதியில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது'' என்றார். இதன்மூலம் தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக ரூ.1,201 கோடி கிடைக்க உள்ளது.

எதற்கெல்லாம் விலை குறைப்பு
மேலும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ராப் (Raab)மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 18 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் அல்லது 5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பென்சில் ஷார்ப்னர்கள் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

டேட்டா லாக்கர்கள்
மேலும் டேட்டா லாக்கர்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நிபந்தனைகளுக்கு உட்பட்டு 18 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications