காவிரி ஆணையமும் முதுகில் குத்தியது! மீண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சட்டப் போராட்டம்!
டெல்லி: காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 18,000 கன அடிநீர் திறந்துவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்றம் அமைத்தது. காவிரி மேலாண்மை ஆணையமானது அமைக்கப்பட்டது முதலே பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. வரம்பை மீறி கர்நாடகாவின் மேகதாது அணை கட்டுமானம் குறித்து எல்லாம் ஆணையம் ஆலோசித்த போது தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா கடந்த 9-ந் தேதி வரை திறந்துவிட வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. காவிரியில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா முறையாக திறந்துவிட மறுக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை கர்நாடகா மறுத்ததால் தமிழ்நாடு பிரதிநிதிகள் ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை காவிரியில் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்ற தீர்ப்புப் படியும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்புப்படியும் திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவு நீரை உடனே திறக்க தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது. இது தொடார்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடிநீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை உடனடியாக உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடும் என தெரிகிறது.
காவிரியில் கர்நாடகா உரிய நீரை திறந்துவிட மறுத்ததால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் காவிரி பாசன விவசாயிகள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications