ஆளுநர் தமிழிசைக்கு எதிராக உச்சநீதிமன்ற கதவை தட்டிய தெலுங்கானா அரசு.. மசோதாக்கள் நிலுவை தொடர்பாக மனு!
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசைக்கும், தெலுங்கானா அரசுக்கும் இடையே நிலவி வரும் மோதல் விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது.
டெல்லி : தமிழ்நாட்டைப் போல தெலுங்கானா மாநிலத்திலும் ஆளுநருக்கும் - முதலமைச்சருக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
தெலுங்கானா மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளிக்காமல் காலம்தாழ்த்தி வருவது புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், அதற்கு ஒப்புதல் ஆளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரியும் மாநில அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தெலுங்கானா மோதல்
தெலுங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், அம்மாநில முதல்வர் சந்திர சேகர் ராவ் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆளுநரும், முதல்வர் தரப்பும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டதும் நடந்தேறியது. இந்நிலையில் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தெலுங்கானா தலைமைச் செயலாளர் ஏ.சாந்திகுமாரி சார்பில் வழக்கறிஞர் உதய்குமார் சாகர் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தமிழிசைக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

10 மசோதாக்கள் நிலுவையில்
அந்த மனுவில், அசாமாபாத் தொழிற்சாலை பகுதி திருத்த மசோதா, நகராட்சி திருத்த மசோதா, அரசு வேலைவாய்ப்பு திருத்த மசோதா, வனவியல் பல்கலைக்கழக மசோதா, பல்கலைக்கழகங்கள் பணி நியமன வாரிய மசோதா, மோட்டார் வாகன வரி மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், இந்த மசோதாக்களில் 7 மசோதாக்கள் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் தற்போது வரை நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
மற்ற 3 மசோதாக்கள் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு இதுவரை தெலுங்கானா மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை மீறி ஆளுநர் நடந்து கொள்வது வழக்கத்துக்கு மாறான, சட்டவிரோதமான, அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்
மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க தெலுங்கானா ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தெலுங்கானா அரசு சார்பில் அம்மாநில தலைமை செயலாளர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் விவகாரம்
முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி வழங்காததைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் ஆம்ஆத்மி அரசு தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ஆளுநர் மாநில அமைச்சரவை மற்றும் அதன் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டவர் என்பதால், பட்ஜெட் அமர்வைக் கூட்ட வேண்டும் எனக் கோரினால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications