இஸ்ரேலுடன் இணக்கம்.. பாலஸ்தீன உறவில் சுணக்கம்! இந்திய அணுகுமுறையில் ஏன் இந்த மாற்றம்? விளக்கம் இதோ
டெல்லி: இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை பிரதமர் மோடி 'பயங்கரவாத தாக்குதல்' என சாடியிருந்தார். இது இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக உறுதி செய்திருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நிலைப்பாடு முன் இருந்ததை போல தற்போது இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் இஸ்ரேலியர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சமபவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஹமாஸ் படையினரை பயங்கரவாதிகள் என்று சாடிய அவர், இஸ்ரேலுடன் நிற்பதாக கூறியுள்ளார். பாலஸ்தீனம்-இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. அதாவது நேரு காலத்தில் இந்தியா பாலஸ்தீனத்தின் பக்கம் நின்றது. பாலஸ்தீனம் என்ற நாட்டை மட்டுமே இந்தியா அங்கீகரித்தது.
கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்த மிகச்சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.1950ம் ஆண்டு இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தாலும், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு இஸ்ரேலுடன் எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் விதமாக 'பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம்' என இந்தியா அஞ்சல் தலையை கூட அப்போது வெளியிடப்பட்டது. இவ்வளவு ஏன்? இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும் என பிரபல அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வலியுறுத்தியபோது கூட நேரு அதை ஏற்கவில்லை.
பாலஸ்தீனத்திற்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்திருக்கிறது. ஆனால் சோவியத் யூனியன் வீழ்ந்த போது பாலஸ்தீனம் குறித்த நிலைப்பாட்டில் இந்தியா பெரும் மாற்றத்தை கண்டது. கொஞ்சம் கொஞ்சமாக உதவிகள் குறைய தொடங்கின. ஒரு கட்டத்தில் இஸ்ரேலுடன் இந்தியா நெருக்கமாக தொடங்கியது. கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு சென்றார். இந்திய வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் முன்னெப்போதும் நடந்ததில்லை. சுதந்திர இந்தியாவின் எந்த பிரதமரும் இஸ்ரேலுக்கு சென்றது கிடையாது. ஆனால் பிரதமர் மோடி இதனை மாற்றி அமைத்தார்.
இப்படியாக நடைபெற்ற மாற்றங்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தற்போது சீனா, அமெரிக்காவுக்கு போட்டியாக வளர்ந்திருக்கிறது. மட்டுமல்லாது ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடனும் சீனா இணக்கம் காட்டி வருகிறது. இந்த நாடுகளுடன் தொழில் வளர்ச்சியை பகிர்ந்துகொள்ளவும், வணிகம் மேற்கொள்ளவும் 'பட்டு பாதை' திட்டத்தை தயார் செய்து வருகிறது. இந்த பாதை சீனாவின் கிழக்கே தொடங்கி, மேற்கே இத்தாலி வரை நீண்டிருக்கிறது. இந்த பாதையில் பண்டைய சீனர்கள் வணிகம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இதே பாதையில் மீண்டும் நவீன முறையில் வணிகத்தை தொடங்க சீனா முயன்று வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. இது அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பட்டு பாதை மூலம் சீனாவின் வணிகம் மேலும் அதிகரித்தால் சீனா உலகின் தவிர்க்க முடியாத நாடாக மாறிவிடும். இதனால் இதற்கான மாற்றுப்பாதையை அமெரிக்கா திட்டமிட்டு வந்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்தும் நாடாக தற்போது இந்தியா உருவெடுத்திருக்கிறது. அதாவது இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் மிகப் பெரிய ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்து திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இது இந்தியாவிலிருந்து அரபிக்கடல் மூலம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் அங்கிருந்து கிரீஸ் வரை விரிவடைகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களை இந்த வழியில் கொண்டு செல்வதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு குறைந்த செலவில் வணிகம் செய்ய முடியும். இதற்கு இஸ்ரேலின் ஒத்துழைப்பு அவசியமாகும். இந்த திட்டம் IMEC- India-Middle East-Europe Corridor என்று அழைக்கப்படுகிறது. எனவேதான் இஸ்ரேலுடன் இந்தியா நட்பாக செல்கிறது. இருப்பினும் பாலஸ்தீனத்திற்கு எதிராக இந்தியா இதுவரை எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












Click it and Unblock the Notifications