கெஜ்ரிவால் சொன்ன ஒற்றை வார்த்தை.. நடிகை குஷ்புவுக்கு வந்ததே கோபம்.. பரபரத்த ட்விட்டர்.. என்ன நடந்தது?
டெல்லி: ரிசர்வ் வங்கி சார்பில் ரூ.2000 நோட்டு திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் நடிகை குஷ்பு, அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ.500, ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டன. அதன்பிறகு புதிய ரூ.500 நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு ரூ.1000க்கு பதில் ரூ.2000 நோட்டு புழகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் தான் சமீபகாலமாக ரூ.2000 நோட்டுகள் மக்கள் மத்தியில் பழங்கவில்லை. இதற்கிடையே தான் நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில், ‛‛ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்பட உள்ளது. மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் வழங்கி மாற்று கரன்சி பெற்று கொள்ளாலம். அதேபோல் மக்களுக்கும் ரூ.2000 நோட்டுகள் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ளவர்கள் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. இதுபற்றி டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛ரூ.2000 நோட்டுகள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஓழியும் என்று முதலில் கூறினார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். பிரதமர் என்பவர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுமக்கள் அவதிப்படுவது அவருக்கு புரிவது இல்லை'' என சாடியிருந்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கருத்து பாஜகவில் செயல்பட்டு வரும் நடிகை குஷ்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை டேக் செய்து, ‛‛இது ஆணவத்தின் முழு உருவம். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட தன்மையுடன் செயல்பட வேண்டும். நமது நாட்டின் பிரதமர் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இதுபோன்ற மொழி என்பது ஏற்கத்தக்கது அல்ல'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications