இந்த மாதம் உங்க அக்கவுண்டில் இருந்து.. வங்கிகள் ரூ.436 பிடிக்க வாய்ப்பு இருக்கு.. ஏன் தெரியுமா?
டெல்லி: வங்கிக் கணக்கில் இருந்து திடீரென கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படுவது உண்டு. அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இந்த மாதத்தில் ரூபாய் 436 பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. அது எதற்காக என்பதை இங்கே பார்க்கலாம்.
நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு தற்போது வங்கிக் கணக்கு உள்ளது. அரசின் நிதி உதவி கூட பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கிற்கே வரவு வைக்கப்படுவதால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை பல கோடிகளில் உள்ளது. இதில், வங்கிக் கணக்கில் இருந்து திடீரென கட்டணங்கள் பிடித்தம் செய்யப்படுவது உண்டு. அதற்கு பல காரணங்கள் உள்ளன.

குறிப்பாக ஏடிஎம்களில் மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே இலவசமாக பணம் எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு மேல் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க சென்றால் ரூ.21 வரை கட்டணமாக வங்கிகள் பிடித்து விடுகின்றன. அதேபோல், மினிமம் பேலன்ஸ் இல்லையென்றாலும் வங்கிகள் அபராதம் போல் கட்டணங்களை பிடித்து விடுகின்றன.
வங்கிகள் குறைந்த அளவு தொகை பிடிப்பதால் சில வாடிக்கையாளர்கள் பெரிதும் கண்டு கொள்வது இல்லை. வங்கிகள் இந்த மாதம் ரூ.436 ரூபாய் பிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா(PMJJBY) என்ற காப்பீடு திட்டத்தில் நீங்கள் பயனாளியாக இருந்தால் இந்த தொகை உங்களுக்கு பிடிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
ஆண்டு தோறும் மே மாதத்தில் ரூ.436 ரூபாயை வங்கிகளின் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கின்றன. பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு ரூ.2 லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
ஸ்டேட் வங்கி உள்பட பிற வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ்களில் கணக்கு வைத்து இருக்கும் வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற சம்மதம் தெரிவித்து இருந்தாலோ..அல்லது அக்கவுண்டில் இருந்து தானாகவே பணம் எடுக்க அனுமதி கொடுத்து இருந்தாலோ இந்த பணம் பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. PMJJBY ஆயுள் காப்பீட்டு திட்டம் 12 மாத காலம் கொண்டது.
ரூ.2 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீட்டு கொள்கை கால அவகாசம் ஜூன் 1 முதல் மே 31 வரை ஆகும். எனவே மே 31 ஆம் தேதிக்கு முன்பாக ரூ.436 வரை பிடித்தம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் தொடர விரும்பவில்லை என்றால் நீங்கள் ஆட்டோ டெபிட் செய்வதை ரத்து செய்ய முடியும். இதற்கு கண்டிப்பாக உங்கள் வங்கி கணக்கு இருக்கும் கிளைக்கு நீங்கள் செல்ல வேண்டும்.

அங்கு வங்கி அலுவலர்கள் கேட்கும் விவரங்களை அளித்து PMJJBY - ஆயுள் காப்பீட்டில் இருந்து விலகிக் கொள்ளலாம். அதேபோல், உரிய நேரத்தில் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா பாலிசி தானாகவே ரத்து ஆகிவிடும். அதேபோல், தானாக பணம் எடுக்கும் அளவிற்கு உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் இந்த காப்பீடு ரத்து ஆகிவிடும்.












Click it and Unblock the Notifications