உத்தர பிரதேசத்தில் ஆட்சி யாருக்கு? எந்த கட்சிக்கு எத்தனை சீட்? டைம்ஸ் நவ் பரபர கருத்துக் கணிப்பு
டெல்லி: உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேனல், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.
2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாஜக ஆட்சியமைக்கும்
இந்த நிலையில்தான் டைம்ஸ் நவ்-போல்ஸ்ட்ராட் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகி இருக்கின்றன . அதில் பாஜக கூட்டணி 239 முதல் 245 தொகுதிகள் வரை வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சமாஜ்வாதி முன்னேற்றம்
சமாஜ்வாதி கட்சி 2017ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெற்ற வெற்றியைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிக தொகுதிகளில் வெற்றிபெறும். அதாவது 119 தொகுதிகள் முதல் 125 தொகுதிகள் வரை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது . கடந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

பகுஜன் சமாஜ், காங்கிரஸ் பரிதாபம்
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, 30 தொகுதிகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்கிறது இந்த கருத்து கணிப்பு. கடந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் நிலைமை கடந்த தேர்தலைப் போலவே பரிதாபமாக இருக்கிறது. 5 முதல் 8 தொகுதிகள் மட்டும் தான் அந்தக் கட்சியால் வெல்ல முடியும் என்று கணித்துள்ளது டைம்ஸ் நவ். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றதற்கு என்பது நினைவுகூரத்தக்கது.

யோகி ஆதித்யநாத்திற்கு செல்வாக்கு
முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தருகிறது என்று கூறும் இந்த கருத்து கணிப்பு, அவரது செல்வாக்கிற்கு முக்கிய காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படவதும் கட்டாய மதமாற்றங்கள் சட்டபூர்வமாக தடுத்து நிறுத்தப்படுவதும்தான் யோகியை பிடிக்க முக்கிய அம்சங்களாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மக்கள் தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது.

மத மோதல்கள்
அதேநேரம் குடியுரிமை சட்ட திருத்தம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பாதிபேர் குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது என்று தெரிவித்துள்ளனர். இது மத மோதல்களை உருவாக்க வழிவகுக்கும் என்பது அவர்கள் பார்வையாக இருக்கிறது. சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், எப்போதுமே முஸ்லிம்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து இந்துக்களை புறக்கணிக்கிறது என்று பாஜக எடுத்து முன்வைக்கக்கூடிய பிரச்சாரத்திற்கு வரவேற்பு இருப்பதாக இந்த கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.

இரு கருத்துக் கணிப்புகள்
இந்த கருத்துக் கணிப்புகள் நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை 9 ஆயிரம் நபர்களிடம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சில தினங்கள் முன்பு, ஏபிபி-சிவோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தன. அதில், பாஜக கூட்டணி 217 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications