ரூ100 கோடி ஊழல்: அமலாக்கத்துறை ஓலை- இன்று அபிஷேக் பானர்ஜி ஆஜர்- "இந்தியா" கூட்டத்துக்கு ஆப்சென்ட்!
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியை ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை.
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவராக உள்ள அபிஷேக் பானர்ஜி எம்பி, மமதா பானர்ஜியின் சகோதரர் மகன். 2016-ல் மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனங்களில் ரூ100 கோடி ஊழல் நடைபெற்றது; அதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றது என்பது அமலாக்கத்துறை வழக்கு. இது தொடர்பாக சிபிஐயும் விசாரித்து வருகிறது.

ரூ100 கோடி ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் அபிஷேக் பானர்ஜி, மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் தம்மை விடுவிக்க வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் அபிஷேக் பானர்ஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த வழக்கில் இன்று ஆஜராக வேண்டும் என அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.
டெல்லியில் இன்று "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இக்குழுவில் அபிஷேக் பானர்ஜியும் இடம்பெற்றுள்ளார். ஆனால் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பதால் அபிஷேக் பானர்ஜி இன்று மாலை நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு குறைவு எனவும் கூறப்படுகிறது.
முன்னதாக, அபிஷேக் பானர்ஜியை லோக்சபா தேர்தலுக்கு முன்னர் கைது செய்ய வேண்டும் என மத்திய பாஜக அரசு தேடுகிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல். அமலாக்கத்துறை முன்பாக செப்டம்பர் 13-ல் அபிஷேக் பானர்ஜி ஆஜராவார் என மமதா பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications