ராஜ்யசபா வேட்பாளர் ஆன முன்னாள் டிஜிபி, நடிகை.. 4 வேட்பாளார்களை அறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ்!
டெல்லி: வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. முன்னாள் டிஜிபி ராஜீவ் குமார், வழக்கறிஞர் மேனகா குருசாமி, மேற்கு வங்க அமைச்சர் பாபுல் சுப்ரியோ மற்றும் நடிகர் கோயல் மாலிக் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திரிணாமுல் காங்கிரஸ்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாசல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், அதிமுகவின் எம். தம்பிதுரை, மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் (ஏப்ரல் 2ஆம் தேதி) முடிவடைய உள்ளது.
பதவிகாலம் நிறைவுபெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி வெளியிட்டது. அதில், "தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி 26 வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 5 ஆம் தேதி. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 6ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் 9 ஆம் தேதி.
போட்டி இருப்பின் வாக்குப்பதிவு மார்ச் 16ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதற்கான வாக்கு எண்ணிக்கை அன்று மார்ச் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26 ஆம் தேதி தொடங்கி உள்ளது. இருப்பினும் திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எம்.எல்.ஏக்கள் ஆதரவு அடிப்படையில் திமுகவுக்கு 6 இடங்கள், அதிமுகவுக்கு 2 இடங்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான ரிதாப்ரதா பானர்ஜி, சாகேட் கோகாலே, சுப்ரதா பக்ஷி, மவுசம் பெனாசிர் நூர், பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிகாலம் முடிவடையும் நிலையில், அங்கும் மார்ச் 16ல் தேர்தல் நடக்க உள்ளது.
மேற்கு வங்கத்தில் ஐந்து எம்.பிக்களின் பதவி இடங்கள் காலியாகும் நிலையில், சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியால் 4 எம்.பி பதவிகளை எளிதாக கைப்பற்ற முடியும். பாஜக ஒரு எம்.பி பதவியைக் பெற முடியும்.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்க மாநில அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ் குமார், வழக்கறிஞர் மேனகா குருசாமி, நடிகை கோயல் மாலிக் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் டிஜிபி ராஜிவ் குமாரை ராஜ்யசபா எம்.பி ஆக்க மம்தா பானர்ஜி முடிவு செய்ய்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இவ்வளவு உயர் பதவியில் இருந்த ஒரு அதிகாரி மேற்கு வங்க மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பிக்கு பரிந்துரைக்கப்பட்டது இதுவே முதல் முறை.
ராஜிவ் குமார் ஐபிஎஸ், மேற்கு வங்க மாநில காவல்துறை இயக்குநராகப் பணியாற்றினார், முன்னதாக கொல்கத்தா காவல்துறைக்குத் தலைமை தாங்கினார். சாரதா சிட் ஃபண்ட் வழக்கு விசாரணையின் போது மேற்கு வங்க அரசுக்கும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கும் இடையே நடந்த மோதல்களின்போது, மேற்கு வங்க அரசுக்கு ஆதரவானவராக அவர் இருந்தார்.
மோடி அரசாங்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சரான பாபுல் சுப்ரியோ, மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவிலிருந்து விலகி, செப்டம்பர் 2021 இல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். பின்னர் அவர் பாலிகஞ்ச் சட்டமன்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று தற்போது மேற்கு வங்க அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றுகிறார். அவருக்கு தற்போது ராஜ்யசபா சீட் அளிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான குருசாமி, 2018 ஆம் ஆண்டு ஐபிசியின் பிரிவு 377 ஐ நீக்குவதன் மூலம் இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்க வழிவகுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு சட்ட வழக்கில் மனுதாரர்களுக்கு ஆதரவான வழக்கறிஞர்களில் ஒருவர்.
நடிகர் கோயல் மாலிக், பெங்காலி திரைப்படத் துறையில் ஒரு முக்கிய நடிகை மற்றும் மூத்த நடிகர் ரஞ்சித் மாலிக்கின் மகள். அவரது நியமனம், ராஜ்யசபாவில் நன்கு அறியப்பட்ட பிரபலமான நபர்களை களமிறக்கும் டி.எம்.சியின் உத்தியின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications