"சின்னம்மா, டிடிவி சார்!" இதை நோட் பண்ணுங்க! ஓபிஎஸை நம்பி இருட்டிலும் போவாராம் டிடிவி! அடடே பாருங்க
டெல்லி: இன்று டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்துள்ளார். அப்போது பிரஸ் மீட்டில் ஓபிஎஸ் சொன்ன சில கருத்துகள் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா மறந்த சமயத்தில் இருந்தே ஒரு பரபரப்பே இருந்து வருகிறது. இடையில் சில காலம் எடப்பாடி ஓபிஎஸ் இரட்டை தலைமையில் இயங்கி வந்தாலும் மீண்டும் இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைந்த சமயத்தில் முதலில் ஓபிஎஸ் முதல்வராகப் பதவியேற்றிருந்தார். இருப்பினும், அப்போது அவரது அமைச்சரவையில் இருந்த சிலரே சசிகலா முதல்வராக வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஓபிஎஸ்: அப்போது தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த ஓபிஎஸ், தர்மயுத்தம் நடத்தினார். முதலில் அமைதியாக ஜெயலலிதா நினைவிடம் சென்ற ஓபிஎஸ் அங்கே சுமார் 40 நிமிடங்கள் தியானம் செய்தார். அதன் பின்னர் ஓபிஎஸ் சொன்ன கருத்துகள் அரசியல் அரங்கில் தொடர்ச்சியாகப் பல புயல்களைக் கிளப்பியது. அவை சரியாகவே மாதக் கணக்கில் ஆனது. அதுவரை பார்த்த ஓபிஎஸ் வேறாகவும்.. அன்று பார்த்த ஓபிஎஸ் வேறாகவும் இருந்தார்.
அதாவது அன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தன்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகத் தெரிவித்தார். மேலும், தன்னை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்துவதாக வேதனை தெரிவித்த அவர், தனியாக நின்று போராடவும் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார். இது மட்டுமின்றி, சசிகலாவிடம் பொதுச்செயலாளர் மற்றும் முதல்வர் என இரு பதவிகளும் செல்ல வேண்டும் என்றே தன்னை ராஜினாமா செய்ய வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சசிகலா: அந்த நேரத்தில் எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூர் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தான் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி சென்றது. அந்த சமயத்திலேயே சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு எதிராகப் பல காட்டமான கருத்துகளை ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். மேலும், சசிகலா அப்போது சிறைக்குச் சென்றிருந்த நிலையில், சில மாதங்களில் அரசியல் காட்சிகள் மாறின.
எதிர் எதிர் அணியில் இருந்த எடப்பாடியும் ஓபிஎஸும் ஒரே அணியில் கை கோர்த்தனர். அப்போது முதல் எடப்பாடியும் சரி ஓபிஎஸும் சரி சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பல கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். அப்போது சிறையில் இருந்த சசிகலா கடந்த 2021இல் வெளியே வந்தார். அந்தாண்டு நடந்த தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. இருப்பினும், அப்போது எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இணைந்தே இருந்தார்கள்.
ஓபிஎஸ் அமைதி: ஆனால், அதன் பின் இரு தரப்பிற்கும் இடையே சிறு சிறு பூசல்கள் எழத் தொடங்கினர். அப்போது எடப்பாடி தரப்பினர் சசிகலாவை எகிறி அடித்துக் கொண்டிருந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்தது. ஓபிஎஸ் அதன் பின்னர் சசிகலா குறித்து ஓபிஎஸ் விமர்சனங்களை வைக்கவில்லை. அதிமுகவில் தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், ஓபிஎஸின் சொந்த மாவட்டமான தேனியில் இதுபோல எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், சில நேரங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு ஆதரவாகவும் கருத்துகளைக் கூறி வந்தனர். இவை ஒரு பக்கம் நடக்க அதிமுகவில் தனது கன்டிரோலை முழுக்க இழந்தார் ஓபிஎஸ்.. அதிமுக முழுக்க முழுக்க எடப்பாடி பக்கம் சென்றது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரானார். மேலும், ஓபிஎஸை கட்சியில் இருந்தே நீக்குவதாகவும் அறிவித்தனர்.
தலைகீழ் மாற்றம்: இதனால் இப்போது எதிரியின் எதிரி நண்பன் என்ற அடிப்படையில் மீண்டும் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவுடன் கை கோர்த்துள்ளார். இன்று டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ், விரைவில் சசிகலாவைச் சந்திக்க உள்ளதாகவும் அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் தயார் என்று அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்திருந்த ஓபிஎஸ், இந்த முறை சசிகலாவை பழையபடி சின்னம்மா என்றும் டிடிவி தினகரனை டிடிவி சார் என்றும் குறிப்பிட்டார். அரசியலில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பார்களே அதற்கு இது மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் அவரது பழைய பேச்சையும் இந்த பேச்சையும் குறிப்பிட்டு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications