யுஜிசி தேர்வுகள் 2020... வழிகாட்டு நெறிமுறைகள்...இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!!
டெல்லி: யுஜிசி தேர்வுகள் 2020 வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி யுஜிசி தேர்வு நடத்துவது குறித்து அனைத்து தரப்பினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குவாதங்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இன்று அளிக்கும் தீர்ப்பில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் யுஜிசி இறுதித் தேர்வு நடத்துவது மற்றும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த தீர்ப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா கால கட்டத்தில் யுஜிசி மற்றும் கல்லூரி இறுதித் தேர்வுகளை நடத்துவதற்கு மாணவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான வாக்குவாதம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, ''தேர்வு நடத்த வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தாங்கள்தான்'' என்று யுஜிசி வாக்குவாதம் வைத்து இருந்தது.
இந்திய சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா யுஜிசி சார்பில் வாதாடினார். ''டிகிரி கொடுப்பது யுஜிசிதான். அதற்குத்தான் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் இருக்கிறது, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி இந்த தேர்வுகளை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வது எந்த வகையில் நியாயம் ஆகும். அதற்கு அதிகாரம் இருக்கிறதா'' என்று கேள்விகள் எழுப்பி இருந்தார்.
இதற்கு முன்னதாக தேர்வை ரத்து செய்ததற்கான உரிய காரணங்களை முன் வைக்குமாறு, உச்ச நீதிமன்றமும், மத்திய உள்துறை அமைச்சகமும் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி அரசுகளிடம் விளக்கம் கேட்டு இருந்தன.
தேர்வு நடத்துவது குறித்து ஏற்கனவே பல்வேறு கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை தொடர்பு கொண்டு இருப்பதாகவும், அவற்றில் 818 பல்கலைக்கழகங்களில் இருந்து இதுவரை பதில் பெறப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 121 டீம்டு பல்கலைக் கழகங்கள் என்றும், 291 தனியார் பல்கலைக் கழகங்கள், 51 மத்திய பல்கலைக் கழகங்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் 603 தேர்வு நடத்துவது அல்லது நடத்தப் போவதாக தெரிவித்துள்ளன. 209 பல்கலைக் கழகங்கள் ஏற்கனவே ஆன் லைனில் தேர்வுகளை முடித்து விட்டனர். 394 பல்கலைக் கழகங்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதற்கு முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளன.
பெரும்பாலான மாணவர்கள் தேர்வு நடத்தக் கூடாது என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். தங்களது இன்டர்னல் மற்றும் முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில், தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தேதி குறித்து இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.












Click it and Unblock the Notifications