வெள்ள நிவாரண நிதி ரூ276 கோடி..தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைத்த மத்திய அரசு: தங்கம் தென்னரசு ஆவேசம்
டெல்லி: இரு பெரும் பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ276 கோடி மட்டுமே நிதி வழங்கியது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரும் அநீதி என டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக விமர்சித்தார்.
டெல்லியில் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது: சென்ற ஆண்டு அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கைப் பேரிடர்களை தமிழ்நாடு எதிர்கொள்ள நேரிட்டதால், மாநில அரசின் நிதிநிலைமை மிகமோசமாக பாதிக்கப்பட்டது, தமிழ்நாட்டில் நேரிட்ட இவ்விரு பேரிடர்கள் ஏற்படுத்திய பாதிப்பின் தாக்கத்தை விவரித்து விரிவான இரண்டு அறிக்கைகளை அளித்து, பேரிடர் நிவாரண நிதியாக 37,906 கோடி ரூபாயை மாநில அரசு கோரியிருந்தது.

ஆனால் மத்திய அரசு மிகக் குறைவாக 276 கோடி ரூபாயை மட்டுமே விடுவித்துள்ளது. பேரிடர்களின் அளவையும் உட்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் சேதத்தையும் கருத்தில் கொள்கையில், இந்த இழப்பீட்டுத்தொகை தேவையைவிட மிகக் குறைவானது மட்டுமின்றி இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும்.
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விடுவிக்கப்படும் நிதி என்பது, மாநிலங்களுக்குச் அளிக்க வேண்டிய உரிய நியாயமான தொகையாகும். எனவே பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு கூடுதலாக போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
வரவிருக்கும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, தமிழக அரசுக்கு 3,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் ஈட்டிய வரி வருவாய் அளவினை புதிய வரி முறையில் எட்டப்படும் வரையில், மாநிலங்களுக்கு போதுமான அளவில் இழப்பீடு வழங்கப்படும் என்ற நியாயமான எதிர்பார்ப்பில் மட்டுமே மாநிலங்கள் தங்களது வரிவிதிக்கும் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டன.
ஆனால், மத்திய அரசு 30.06.2022 அன்று சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீட்டினை நிறுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் குறைவு ஏற்படுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு பின்னர், பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் வேளையில், ஒன்றிய அரசு, பகிர்ந்தளிக்கக்கூடிய வரித்தொகுப்பிலிருந்து மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களைமாநிலங்கள் வருவாய்தனது வருவாய் வசூலை விதிப்பதன் வாயிலாக மாற்றி வருகிறது. இதனால், 2011-12 ஆம் ஆண்டில் 10.4% ஆக இருந்த மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் 2022- 23 ஆம் ஆண்டில் 20.28% ஆக மொத்த வரி வருவாயின் சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலங்களின் வரி பகிர்வில் தங்களின் நியாயமான பங்கைப் பெறும் வகையில் வரிவிதிப்புக்கான அடிப்படை வீதங்களில் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை இணைக்குமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications