"இந்திய தேர்தலை அமெரிக்கா சீர்குலைக்க முயல்கிறது!" ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு.. பின்னணி என்ன
டெல்லி: இந்தியாவில் நடக்கும் லோக்சபா தேர்தலை அமெரிக்கா சீர்குலைக்க முயல்வதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மத சுதந்திரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் கடந்த மே 1ஆம் தேதி இது குறித்த ரிப்போர்ட் வெளியிடப்பட்டது.

அதில் இந்தியாவின் மத சுதந்திரத்திற்கான நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கிடையே அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக ரஷ்யா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
ரஷ்யா குற்றச்சாட்டு: ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவாவின் பேச்சை அந்நாட்டின் அரசு ஊடகமான ஆர்டி நியூஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் தேசிய மனநிலை மற்றும் வரலாறு குறித்து அமெரிக்காவுக்கு போதிய புரிதல் இல்லை என்றும், இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தொடர்ந்து கூறி வருவதாகவும் மரியா ஜகரோவா கூறியுள்ளார். மேலும், இது இந்தியாவை அவமரியாதை செய்யும் செயல் என்றும் ஜகரோவா சாடியுள்ளார்.
ஜகரோவா இது குறித்து மேலும் கூறுகையில், "இந்தியாவில் உள்ள அரசியல் சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தி, பொதுத் தேர்தலில் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதற்கான காரணம் [இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் கருத்து].. இதன் மூலம் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயல்வது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அறிக்கை: அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையமான USCIRF இந்தாண்டிற்கான மத சுதந்திர ரிப்போர்ட்டை வெளியிட்டு இருந்தது. அதில் மொத்தம் 17 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் (Country of Particular Concern) எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த லிஸ்டில் இந்தியாவும் இடம்பெற்று இருந்தது பேசுபொருள் ஆனது. 5ஆவது ஆண்டாக இந்த லிஸ்டில் தொடர்ந்து இந்திய இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
சீனா, ஈரான், வடகொரியா, ரஷ்யா, சவுதி, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், "கடந்த 2023இல் இந்தியாவில் மத சுதந்திர சூழல் மோசமடைந்தது. இந்தியாவில் ஆட்சியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, பாரபட்சமான தேசியவாதக் கொள்கைகளை வலுப்படுத்தியது. வெறுப்பு பேச்சுகளை ஆதரித்து உள்ளது.
மத சிறுபான்மையினர்: முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், யூதர்கள் மற்றும் பழங்குடி மக்களைப் பாதிக்கும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. உபா தொடங்கி பசுவதை சட்டங்கள் வரை பல்வேறு சட்டங்கள் மூலம் மத சிறுபான்மையினர் கண்காணிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதில் மணிப்பூர் கலவரம், காஷ்மீர் விவகாரம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு எனப் பல விஷயங்கள் குறித்த கருத்துகளும் உள்ளன.
வெளியுறவு துறை: இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதற்கு அப்போதே வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. இது தொடர்பாக அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இந்த ரிப்போர்ட்டை வெளியிட்ட சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் பக்கச் சார்புடைய அமைப்பு.. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் இந்தியா குறித்து ஆதாரமில்லாத தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்" என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications