கலைஞருக்கு நன்றி.. மாநிலங்களவையில் தனது கடைசி நாளில் உருக்கமாக உரையாற்றிய வைகோ!
டெல்லி: "என்னை முதன்முதலாக மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கு நன்றி" என மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் கடைசி நாளில் உரையாற்றியுள்ளார்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம், எம்.எம். அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் 6 எம்.பிக்கள் தங்களின் கடைசி உரையை மாநிலங்களவையில் இன்று நிகழ்த்தினர். இன்று பேசிய வைகோ, தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றிய வைகோ ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் ஓய்வுபெறும் நாளில் மாநிலங்களவையில் பேசிய வைகோ, "என்னை முதன்முதலாக மாநிலங்களவை அனுப்பிய கலைஞருக்கு நன்றி. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த முரசொலி மாறனால் வார்த்தெடுக்கப்பட்டேன்.
சோனியா காந்தி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரது உரைகளை கேட்க வாய்ப்பு கிடைத்தது. ஈழத்தமிழருக்காக 13 முறை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளேன். என்.எல்.சி.யை தனியார் மயமாக்காமல் தடுத்திருக்கிறேன். தமிழ் ஈழ விடுதலைக்காக குரல் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்" என்று கூறினார்.
முன்னதாக வைகோவை குறிப்பிட்டு பேசிய மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண், "நாடாளுமன்றத்தின் சிங்கம் என்று அழைக்கப்படும். தனது அனல்பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்த்த வைகோ இன்றுடன் ஓய்வு பெறுகிறார். 1978, 1984, 1990 என தொடர்ச்சியாக மூன்று முறை இந்த அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மீண்டும் 2019 இல் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
இந்த மாநிலங்களவைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் அளித்துள்ளார். கூட்டாட்சி, சமூக நீதி பிரச்சனைகளுக்காக அவரது குரல் ஒலித்தது. கட்சி பாகுபாடின்றி நாட்டின் நலனுக்காக செயல்பட்டவர்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications