போரா, ஆகாகனி.. முஸ்லிம்களை கூறுபடுத்த முயற்சி! டெல்லிக்கே போன விசிக தலைவர் திருமாவளவன்.. என்னாச்சு?
டெல்லி : பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் வாரிய சட்ட மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபனை மனுவை அளித்துள்ளார் எம்பியும் விசிக தலைவருமான திருமாவளவன்..
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்தம் குறித்து பல்வேறு தரப்பினரும், பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிம்களில் உள்ள போரா, ஆகாகனி என வெவ்வேறு பிரிவினருக்கு தனித்தனி வக்பு வாரியங்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம்களைக் கூறுபடுத்துகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வஃக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1955-ம் ஆண்டு வஃக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. இந்த சட்டதிருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மசோதாவுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜக இதுதொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க நாடாளுமன்ற குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் மசோதாவை நிறைவேற்றக்கூடாது என புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபனை மனுவை அளித்துள்ளார் எம்பியும் விசிக தலைவருமான திருமாவளவன். அதில், வக்பு நிறுவனங்கள் குறித்த விளக்கத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களை இந்த மசோதா செய்திருக்கிறது.
வக்பு வாரியத்தின் அமைப்பு முத்தவல்லியின் கடமைகள் ஆகியவற்றிலும் மாற்றங்களைச் செய்திருக்கிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 26 இல் சிறுபான்மை சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது;
வக்பு வாரியங்களை நிர்வகிப்பதில் முஸ்லீம் அல்லாதவர்களை அதிகம் நியமிக்க வழி வகுக்கிறது; வக்பு வாரிய நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகரிக்கிறது. வக்பு வாரிய அதிகாரங்களைக் குறைக்கிறது; வக்பு வாரிய கவுன்சிலில் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களை நியமித்து அதன் பண்பை மாற்றுகிறது.
வக்பு வாரிய சொத்துக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. முஸ்லிம்களில் உள்ள போரா, ஆகாகனி என வெவ்வேறு பிரிவினருக்கு தனித்தனி வக்பு வாரியங்களை உருவாக்க அனுமதிப்பதன் மூலம் முஸ்லிம்களைக் கூறுபடுத்துகிறது. ஆகிய காரணங்களால் வக்பு திருத்த மசோதாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது” என நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications