ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. அன்புமணி ஷாக்!
டெல்லி: டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாமக தலைவர் அன்புமணி என்று சொல்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். அதனை தேர்தல் ஆணையமும் ஏற்று அவரை தலைவராக அங்கீகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், பாமக தலைவர் அன்புமணி என்று சொல்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் 04.12.2025 அன்று நடந்த விசாரணையில் 06.12.2025ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் நான் தொடர்ந்த வழக்கில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி என்று சொல்லுவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே அன்புமணி கட்சியின் தலைவர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு அங்கீகாரம் இல்லாததால், தேவை ஏற்படின் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28.05.2022 முதல் 28.05.2025 வரை மூன்றாண்டு காலம் தலைவர் பதவி என்பதற்கு மாறாக, ஒரு போலி ஆவணத்தை (கடிதம்) தயாரித்து 2023 முதல் 2026 வரை என்று தேர்தல் ஆணையத்திற்கு அன்புமணி கொடுத்த போலி கடிதத்தை ஏற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்று அறிவித்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தது செல்லாது என்பது உறுதியாகிவிட்டது.
எனவே நான் 46 ஆண்டு காலம் உழைத்து 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று இயக்கத்தை வளர்த்து மருத்துவர் அன்புமணியை மத்திய அமைச்சராக மேலும் பலரை மத்திய அமைச்சர்களாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக, உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற செய்த என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு செய்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் என்னிடமிருந்து கட்சியையும், கட்சி தொண்டர்களையும், நாட்டு மக்களையும் பிரிக்க முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்டெடுத்து மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவதே என்னுடைய பணியாக ஏற்று மக்கள் பணி ஆற்றுவேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. நீதி வென்றுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications