இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட பாக்குறீங்களா! ராமர்கோவில் விவகாரம்: சீண்டிய பாகிஸ்தானை விளாசிய இந்தியா
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, ராமர் கோவில் கட்டுமான பணிகளை, கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் நடந்து வந்தது.

உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் கோவில் கட்டுமான பணிகள் நடந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் வகையில் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றன. இரும்பு பொருட்கள் எதுவும் இன்றி வெறும் கற்களை கொண்டே இந்த கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது. புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் 5 வயது பால ராமர் சிலை என்பது கடந்த 18 ம் தேதி நிறுவப்பட்டது.
பாகிஸ்தான் விமர்சனம்: இதையடுத்து இன்று கோவிலில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய பிரான் பிரதிஷ்டை சடங்குகள் 12.45 மணி வரை நடந்தது. பிரதமர் முன்னின்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்தார். ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பாலராமர் சிலை முன்பாக கண்களை மூடி மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
இதன் பின்னர் ராமர் சிலைக்கு தீப ஆராதனையும் காட்டினார். ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியாவின் பெரும்பான்மைவாதத்தை காட்டுவதாக கூறியுள்ளது.
சிறுபான்மை மக்களை: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "இந்தியாவில் அரசியல், பொருளாதார ரீதியாக முஸ்லீம்கள் ஓரங்கட்டப்படுவதற்கான முயற்சிகளின் முகமாக இது அமைந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் இந்துத்வா சித்தாந்தம் மத நல்லிணகத்திற்கும் பிராந்திய அமைதிக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. முஸ்லீம்கள் உள்பட சிறுபான்மை மக்களையும் அவர்களின் வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பையும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை போல இல்லை: இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், இந்திய முஸ்லீம்களை தூண்டிவிட அந்த நாடு முயற்சிக்கிறது என்று இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இது தொடர்பாக உயரதிகரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:-
பாகிஸ்தானை போல இந்தியா ஒன்றும் அரசியல் நிலையற்ற தன்மை கொண்ட நாடு இல்லை. பாகிஸ்தானில் நீதித்துறைகூட அந்த நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ வழிகாட்டுதல் படி செயல்படுகிறது. இந்தியாவில் நாட்டின் உச்ச நீதிமன்றம் தான் அயோத்தியில் சர்ச்சைக்குரிய மொத்த நிலத்தையும் கடவுள் பாலராமருக்கு கிடைத்தது.
அனைத்து நீதிமன்றங்களையும் கடந்து வந்தது: முஸ்லீம்களுக்கு மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தையும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நீதித்துறையின் ஆய்வுக்கு உட்படுத்தபட்டது. அயோத்தி வழக்கு அனைத்து நீதிமன்றங்களையும் கடந்து வந்தது. தனி நீதிபதி அமர்வு பெரிய தீர்ப்பு எதையும் வழங்கவில்லை.
தீர்ப்பை அளித்த நீதிபதிகள் அமர்வில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த நீதிபதிகள் கூட இடம் பெற்று இருந்தார்கள்" என்று கூறியுள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்த நிலையில், பெரும்பான்மை வாதத்தை காட்டுவதாக பாகிஸ்தான் விமர்சித்து இருந்தற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications