"பாஜக பிளான் இதுதான்.." உண்மையை போட்டு உடைத்த பிரசாந்த் கிஷோர்.. அப்போ 2024 லோக்சபா தேர்தல்?
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவைச் சமாளிக்க இந்தியா கூட்டணியால் வீழ்த்த முடியுமா.. அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்துத் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
"இந்தியா" கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலகியது எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்தியா கூட்டணியை உருவாக்கிய முக்கிய தலைவர்களில் ஒருவராக நிதிஷ்குமார் இருந்தார்.

லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், திடீரென அவர் கூட்டணியில் இருந்து விலகியுள்ளது சலசலப்பை உண்டாக்கியுள்ளது. அதிலும் அவர் மீண்டும் பாஜக உடன் கை கோர்த்துள்ளது எதிர்க்கட்சிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர்: இது குறித்து பிரபல தேர்தல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வரை நிதிஷ்குமாரை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த பாஜக, திடீரென அவரை ஏற்றுக் கொண்டது ஏன்.. இதற்கான பின்னணி என்ன என்பது குறித்தும் அவர் முக்கிய தகவல்களைக் கூறியுள்ளார். நிதிஷ்குமாரை மீண்டும் இணைத்துக் கொண்டதன் மூலம் பாஜக திட்டம் என்னவாக இருக்கும். அது லோக்சபா தேர்தலில் அவர்களுக்கு எந்தளவுக்குப் பலன் தரும் என்பதையும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், "நிதிஷ் குமார் எதிர்க்கட்சியின் கூட்டணியில் இருப்பது எல்லாம் அவ்வளவு பெரிய விஷயமல்ல.. அவர் முடிவுகளையே மாற்றும் வகையில் எந்தவொரு முக்கியமான விஷயத்தையும் கொண்டுவரவில்லை. ஆனால், நம்பிக்கை என்று வரும் போது எதிர்க்கட்சி ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர்கள் இருந்தனர்.
திட்டம் இதுதான்: எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அவர் முக்கியமான நபராக இருந்தார். நிதிஷ்குமாரை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதன் மூலம் பாஜக புதிய பிளானை கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த சண்டையில் தோற்றுவிட்டு, போரில் வெல்ல வேண்டும் என்ற வியூகத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. மேலும், இப்போது நிதிஷ்குமாரை மீண்டும் பாஜக தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால் பாஜகவுக்கு உண்மையில் மிக பெரிய லாபம் எதுவும் இல்லை..
மேலும், நிதிஷ்குமார் வருகையால் பீகாரில் பாஜகவால் அதிக இடங்களை வெல்ல முடியும் என்றும் நான் சொல்லவில்லை. ஆனால், எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர் ஒருவரைக் கூட்டணியில் இருந்து வெளியேற்றியதன் மூலம், பாஜக எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியாக ஒரு அடியைக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.
லாபம் இல்லை: அதாவது பாஜகவுக்கு இதனால் களத்தில் எந்தவொரு லாபமும் இருக்காது என்ற போதிலும்.. எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் அடியாக இது இருக்கும். இது நடந்தாலும் நடக்காவிட்டாலும் சரி பாஜக தான் முன்னிலையில் இருந்தது. சரியாக இந்த நேரத்தில் நிதிஷ்குமார் இந்த பக்கம் வந்துள்ளது எதிர்க்கட்சிகளுக்கு உளவியல் ரீதியான அடியைக் கொடுத்துள்ளது.
இந்தியா கூட்டணியை இதற்கு முன்னதாகவே உருவாகி இருக்கலாம். 2024இல் லோக்சபா தேர்தல் நடக்கும் என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்திருந்தனர். அவர்கள் இந்தியா கூட்டணியை 2022 அல்லது 2021இல் உருவாக்கியிருக்கலாம். அப்போதே கூட்டணியை உருவாக்கியிருந்தால் அவர்களுக்குத் தேவையான நேரம் கிடைத்திருக்கும். கூட்டணியில் உருவாகும் பிரச்சினைகளைச் சரி செய்ய இரண்டு ஆண்டுகள் அவகாசம் கிடைத்திருக்கும். ஆனால், அதை அவர்கள் செய்யத் தவறிவிட்டனர்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications