"உடனே மீட் பண்ணணும்.."யோகி ஆதித்யநாத்தை திடீரென சந்திக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்! என்ன காரணம்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறும் கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்திக்கிறார்.
லோக்சபா தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

சந்திப்பு: இருப்பினும், கடந்த இரண்டு தேர்தல்களைப் போல பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று மாலை சந்திக்கிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இருவரும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல்முறையாகும். கோரக்பூரில் இருவரும் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக உத்தரப் பிரதேசத்தில் அதிகளவில் சீட்களில் வெல்லாத நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
என்ன காரணம்: இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கூறப்படுகிறது. இன்று பிற்பகல் யோகி ஆதித்யநாத் கோரக்நாத் கோயிலுக்குச் செல்லும் நிலையில், அதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் டெல்லி பாஜக தலைமைக்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாக்பூரில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், "ஆர்எஸ்எஸ் தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் நடந்த விழாவில் பேசிய மோகன் பகவத், "ஒரு உண்மையான சேவகர் கண்ணியமுடன் இருக்க வேண்டும்.. ஒரு பதவியில் இருந்தால் அந்த பதவிக்கான மரியாதையைத் தர வேண்டும்.. இந்த வேலையை நான் தான் செய்தேன் என்று சொல்லும் திமிர் இருக்கவே கூடாது.. அப்படிப்பட்ட ஒரு நபரை மட்டுமே உண்மையான சேவகன் என்று அழைக்க முடியும்" என்று மறைமுகமாகச் சாடும் வகையில் பேசியிருந்தார்.
மோகன் பகவத்: மேலும், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் என இரு தரப்புமே பிரச்சாரத்தில் மிக மோசமாக நடந்து கொண்டதாகவும் போலி செய்திகள் கூட பரப்பப்பட்டதாகவும் அவர் சாடியிருந்தார். மோகன் பகவத் பாஜக மீது இந்தளவுக்கு வெளிப்படையாக குற்றஞ்சாட்டி இருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. என்ன தான் மரியாதை நிமித்தமான சந்திப்பு எனச் சொன்னாலும் லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த லோக்சபா தேர்தலில் 400+ சீட்களில் வெல்ல வேண்டும் என்ற முழக்கத்துடன் பாஜக தேர்தலைச் சந்தித்தனர். இருப்பினும், பாஜகவால் தனிப்பெரும்பான்மையைக் கூடப் பெற முடியவில்லை. பாஜக 240 சீட்களில் மட்டுமே வென்றது. இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது.
உத்தரப் பிரதேச தேர்தல் முடிவுகள்: இந்த லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவால் அதிக இடங்களில் வெல்ல முடியவில்லை. நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 80 லோக்சபா சீட்கள் உள்ளன. அதில் 2014இல் 71 சீட்களில் வென்ற பாஜக, 2019இல் கூட 62 சீட்களில் வென்றது. ஆனால், இந்த முறை பாஜகவால் வெறும் 33 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி 37 சீட்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் 6 சீட்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications