தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி.. புதிய உச்சம் தொட என்ன காரணம்.. வரும் காலத்தில் குறையுமா?
டெல்லி: கடந்த சில காலமாகவே தங்கத்தைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி இந்தளவுக்கு உயர என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தங்கம் விலை கடந்த சில காலமாகவே உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு இருந்தது. கடந்த வாரம் அதிகபட்சமாக 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6860 வரை சென்று இருந்தது.

வெள்ளி விலை: ஆனால், தங்கத்தைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக கடும் ஏற்றத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த மே 29 வரையிலான கடந்த 10 நாட்களில் மட்டும், 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.10,900 உயர்ந்து ரூ.97,700 ஆக உள்ளது. குறிப்பாகச் சென்னையில் ஏற்கனவே ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்தை எட்டி பிடித்துவிட்டது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரைத் தங்கத்தைப் போலவே வெள்ளியும் செல்வத்துடன் இணைக்கப்பட்டதாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக வெள்ளி சாமி சிலைகளை வீட்டில் வைத்திருக்கும் பழக்கம் பரவலாகவே இருக்கிறது. இந்த வெள்ளி விலை கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்பது குறித்துப் பார்க்கலாம். கடந்த 1981இல் ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2715ஆக இருந்த நிலையில், அது தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. 1988இல் ஒரு கிலோ வெள்ளி ஐந்தாயிரத்தைத் தாண்டியது.
வெள்ளி விலை வரலாறு: அடுத்த 13 ஆண்டுகளுக்கு வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடனேயே இருந்தது. அதிகபட்சமாக 1998இல் 8500 ரூபாய் வரை சென்றது. இருப்பினும், பிறகு மீண்டும் குறைந்து 2001இல் 7215 ரூபாய்க்கு வந்தது. ஆனால், அதன் பிறகே சட்டென அதிகரித்த தங்கம் 2004இல் 10 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. 2008இல் அது ரூ. 20 ஆயிரத்தைத் தொட்ட நிலையில், 2011இல் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரூ.50 ஆயிரத்தைத் தாண்டியது.
அதன் பிறகு 2016, 2017களில் தங்கம் விலை குறைந்து ரூ.36 ஆயிரம் வரை இறங்கினாலும் அதன் பிறகு கொரோனா பரவ தொடங்கியதும் மீண்டும் உச்சம் தொடத் தொடங்கியது. 2020இல் அது மீண்டும் ரூ.50 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இப்போது ஒரு லட்ச ரூபாயை நெருங்கி உள்ளது. அதிலும், கடந்த ஜனவரி 1ஆம் தேதி இந்தியாவில் வெள்ளியின் விலை ரூ.78,600ஆகவே இருந்தது. ஆனால், இப்போது வெறும் 5 மாதங்களில் அது சுமார் 20 ஆயிரம் ரூபாய் அதாவது 24.3% உயர்ந்துள்ளது.
காரணங்கள்: அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதே வெள்ளி மற்றும் தங்கம் விலை உயரக் காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பொருளாதார ரிப்போர்ட் இன்று வெளியாகும் நிலையில், அதைப் பொறுத்து வட்டி விகிதங்களும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இதுவும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரக் காரணமாக இருக்கிறது.
கடந்த நான்கு, ஐந்து மாதங்களில் வெள்ளி இறக்குமதி அதிகரித்துள்ளது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "கடந்த நான்கு மாதங்களில், இந்தியாவில் வெள்ளி இறக்குமதி சில மடங்கு அதிகரித்துள்ளது. சுமார் 2000 டன் வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நகைகள் செய்வதில் வெள்ளி தேவை அதிகரித்தே இதற்கு முக்கிய காரணமாகும். அடுத்த சில ஆண்டுகளில் நகைகளில் தங்கத்தை விட வெள்ளி பயன்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
தொழிற்துறையினர் பயன்பாடு: இத்துடன் தொழிற்துறையிலும் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. டி.வி, பேட்டரிகள், கணினிகள் ஆகியவற்றில் வெள்ளி தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக சோலார் பேனல்கள் அமைக்க வெள்ளி மிக முக்கியமாகத் தேவை. இப்போது சோலார் பேனல்கள் அமைப்பது அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் தேவையும் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் சேர்த்தே வெள்ளி விலை புதிய உச்சம் தொடக் காரணமாக இருக்கிறது.
தங்கத்தைப் போல இல்லாமல் சில்வர் எப்போதும் அதிக ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ளும். இருப்பினும், அதிக பயன்பாடு, வட்டி விகிதம் குறித்த தகவல்களால் வரும் காலத்தில் வெள்ளி விலை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications