"சரியானதையே செய்துள்ளனர்!" மத்திய அரசை திடீரென பாராட்டிய மன்மோகன் சிங்! எதற்கு இப்படி சொன்னார்
டெல்லி: முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தற்போதுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசை திடீரென பாராட்டியுள்ளார். இதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
மத்தியில் கடந்த 2014ஆம் ஆண்டு முதலே மோடி தலைமையிலான பாஜகவே ஆட்சியில் இருக்கிறது. மோடி அரசு எடுத்துள்ள பல கொள்கை முடிவுகளைக் காங்கிரஸ் தொடர்ந்து விமர்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பாஜகவைத் தொடர்ந்து விமர்சித்தே வந்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட நேரங்களில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையே அவரே இப்போது மத்திய அரசின் நிலைப்பாட்டைப் பாராட்டியுள்ளார். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
மன்மோகன் சிங்: கடந்த 2022ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரை ஆரம்பித்தது. இந்தப் போர் தொடக்கத்தில் சில வாரங்களில் நிறைவடையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஓராண்டைக் கடந்தும் இந்தப் போர் தொடர்ந்தே வருகிறது. பெரும்பாலான நாடுகள் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ரஷ்யா மீது வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இருப்பினும், இந்தியா இதில் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்தது. இதற்கும் கூட காங்கிரஸின் சசி தரூர் உள்ளிட்டோர் விமர்சித்தே இருந்தனர். இதற்கிடையே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மன்மோகன் சிங் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்தியா தன் இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதில் சரியானதைச் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், அதே நேரம் சர்வதேச அமைதிக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
என்ன சொன்னார்: தொடர்ந்து பேசிய அவர், "நான் பிரதமராக இருந்த காலத்தை விட இப்போது உள்நாட்டு அரசியலுக்கு வெளியுறவுக் கொள்கை மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இருப்பினும், வெளியுறவுக் கொள்கை விவகாரத்தைக் கட்சி அரசியலுக்குப் பயன்படுத்துவதில் நிதானமாகவே இருக்க வேண்டும்.
நான் இருக்கும் போதே சுழற்சி முறையில் வழங்கப்படும் ஜி20 தலைமை பொறுப்பு இந்தியாவுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி.. ஜி 20 உச்சி மாநாட்டிற்கு உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வருவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. வெளியுறவுக் கொள்கை எப்போதுமே இந்தியாவின் நிர்வாகக் கட்டமைப்பில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.. முந்தைய காலங்களை விட இப்போது இது உள்நாட்டு அரசியலுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. எனவே நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
சரியானதைச் செய்துள்ளனர்: உக்ரைன்-ரஷ்யா போரில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது. இரண்டு உலக நாடுகள் மோதும் போது, மற்ற நாடுகள் யாருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதில் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நிலையில், நமது இறையாண்மை மற்றும் பொருளாதார நலன்களுக்கு முதலிடம் கொடுப்பதில் இந்தியா சரியானதைச் செய்துள்ளது.. அதே நேரத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவும் செய்துள்ளனர்.
அதேநேரம் ஜி20 சர்வதேச மோதல்களைத் தீர்க்காது. கடந்த காலங்களிலும் மோதல்களைத் தீர்ப்பதற்கான மன்றமாக ஜி20 இருந்ததே இல்லை. எனவே, அதை ஒதுக்கி வைத்துவிட்டு, காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் உலகளாவிய வர்த்தகம் ஆகிய சவால்களைச் சமாளிக்கக் கொள்கையை நாம் உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் சீனா பிரதமர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாத நிலையில், இது குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், "சிக்கலான சர்வதேச பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது என்பது குறித்து பிரதமருக்கு நான் ஆலோசனை வழங்குவது சரியானது இல்லை.. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் பிராந்திய மற்றும் இறையாண்மை ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கப் பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications