டெல்லி முதல் மேற்கு வங்கம் வரை.. கைது செய்யப்பட்ட சிட்டிங் அமைச்சர்கள் யார்! வெளியான பரபர தகவல்
டெல்லி: சமீப ஆண்டுகளாகவே சிட்டிங் அமைச்சர்கள் மீதான மத்திய விசாரணை முகமைகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அப்படி சமீப காலங்களில் அமைச்சராக இருக்கும் போதே கைதானவர்கள் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.
2006 முதல் 2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.. அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2017இல் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், தண்டனை விவகாரம் இன்று அறிவிக்கப்பட்டது.
பொன்முடி: பொன்முடிக்கு 3 ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மேல்முறையீடு செய்ய ஏதுவாக ஒரு மாத காலம் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், இப்போது பொன்முடிக்கும் இந்த தீர்ப்பு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல மற்ற மாநிலங்களில் சிட்டிங் அமைச்சர்களாக இருக்கும் போதே கைதானவர்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் பொது விநியோக முறை (PDS) ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் வனத்துறை அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் என்பவரைக் கைது செய்ததது. கடந்த 2011 முதல் 2021 வரை உணவு துறை அமைச்சராக இருந்தவர் ஜோதிப்ரியா மல்லிக். அந்த காலகட்டத்தில் இந்த ஊழல் நடந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். அவர் இப்போது சிறையில் இருந்து வருகிறார்.
கடந்தாண்டு ஜூலை மாதம் மேற்கு வங்க கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி என்பவர் ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவரது வீடு மற்றும் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் மொத்தம் ₹52 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கணக்கில் காட்டப்படாத பணத்தைத் தவிர, நான்கு உயர் ரக கார்களையும் அமலாக்கத் துறை கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.
நாரதா ஊழல் வழக்கு: அதேபோல கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம், நாரதா ஊழல் வழக்கில் இரண்டு அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் சுப்ரதா முகர்ஜி மற்றும் மூன்று எம்எல்ஏக்களை சிபிஐ கைது செய்தது. நாரதா என்ற செய்தி இணையதளம் கடந்த 2014இல் ஒரு ஸ்டிங் ஆபரேஷன் நடத்தியது. இதில் டிஎம்சி அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட லஞ்சம் வாங்கியது தெரியவந்தது.
மகாராஷ்டிரா: அதேபோல கடந்த 2021இல் பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சராக இருந்த நவாப் மாலிக் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் வரை நவாப் மாலிக் சிறையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதேபோல நவம்பர் 2021 தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் என்பவரையும் அமலாக்கத் துறை கைது செய்திருந்தது.
ஆம் ஆத்மி முக்கிய அமைச்சர்கள்: ஆம் ஆத்மியை பொறுத்தவரை இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஹவாலா விவகாரத்தில் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 58 வயதான அவர், சிறையில் இருந்து வருகிறார்.
அதேபோல டெல்லி துணை முதல்வராக இருந்தவர் மணிஷ் சிசோடியாக. டெல்லியில் புதிய மதுபான கொள்கை கொண்டு வரப்பட்ட நிலையில், அதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்தன. தொடர்ந்து ஆளுநர் உத்தரவின்படி விசாரணையும் நடத்தப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் அவர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். அப்போது 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
ஆம் ஆத்மியின் சுகாதார அமைச்சர் விஜய் சிங்லா ஊழல் குற்றச்சாட்டில் மொஹாலி போலீஸாரே இந்தாண்டு தொடக்கத்தில் கைது செய்தனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் உத்தரவைத் தொடர்ந்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், அவர் கைதும் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications