ஜெயிக்க முடியலனா இடத்தை காலி பண்ணுங்க! ‛இந்தியா’ கூட்டணி பிரதமர் வேட்பாளர் யார்? ராகுலை சீண்டிய பிகே
டெல்லி: ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யார் இருக்கலாம்? என்ற கேள்விக்கு ராகுல் காந்தியை சீண்டும் வகையில் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பரபரப்பான பதிலை அளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வென்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. மாறாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளனர்.

இந்த கூட்டணியில் காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்பட 26 கட்சிகள் உள்ளன.
இந்த கூட்டயின் 3 ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் மாநில வாரியாக ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு நடைபெற உள்ளது. மேலும் தற்போதைய சூழலில் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? ஒருங்கிணைப்பாளர்? யார் என்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை. இதனை அறிவித்தால் பிரதமர் பதவியை எதிர்பார்க்கும் கூட்டணியின் பிற தலைவர்கள் அதிருப்தி அடையலாம். இதனால் பிரதமர் வேட்பாளர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.
அதேவேளையில் ‛இந்தியா' கூட்டணியில் அனைத்து கட்சி தலைவர்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தான் கூட்டணியின் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளது. இத்தகைய சூழலில் தான் அரசியல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:

‛‛எதிக்கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்கான சிறந்த வேட்பாளர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தற்போதைய சர்வேக்களின் படி எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு நிபந்தனை என்பது கட்டாயம் வேண்டும். ஒருவர் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களாக மாறி கூட்டணியை வெற்றி பெற செய்ய முடியாவிட்டால் அந்த பொறுப்பில் இருந்து விலகி விட வேண்டும். மாறாக ஒவ்வொரு முறை தோல்விக்கு பிறகும் அதே இடத்தில் அமர்ந்து கொள்வது சரியில்லை. ஏனென்றால் எப்போதும் ராகலின் முகவே முன்வருகிறது'' என்றார்.
இதன்மூலம் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கடந்த 2014, 2019 நாடாளுமன்ற தேர்தல்களின்போது காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறியப்பட்டார். ஆனால் 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இத்தகைய சூழலில் தான் இப்போதும் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என சிலர் கூறி வரும் நிலையில் பிரசாந்த் கிஷோர் இப்படி தெரிவித்துள்ளார்.
******












Click it and Unblock the Notifications